Published : 22 Jan 2025 10:03 AM
Last Updated : 22 Jan 2025 10:03 AM
சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைக் கண்டுள்ளது. இன்று (ஜன.22) காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்து 200-க்கு விற்கப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.
அதன்படி இன்று காலை, 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,525-ம், பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.60,200-க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.104-க்கு விற்கப்படுகிறது. நேற்று தங்கம் ஒரு பவுன் ரூ.59,600-க்கும் விற்பனையான நிலையில் இன்று பவுன் ரூ.60 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இது நகை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விலை உயர்வுக்குக் காரணம் என்ன? தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தாலும் கூட இன்று தங்கம் விலை ஒரு புதிய மைல்கல்லாக அதிகரித்துள்ளது. இதற்கான காரணங்கள் பல உள்ளன. உள்நாட்டைப் பொருத்த வரை இந்திய ரூபாயின் மதிப்பு கடந்து 3 நாட்கள் சிறிய ஏற்றம் கண்டுள்ளதும், பண்டிகை காலம், திருமணம் சீசன் ஆகியனவற்றால் தேவை அதிகரித்துள்ளதாலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சர்வதேச அளவில் பார்க்கும்போது, அண்மையில் அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். எதிர்பார்த்தபடியே அவர் அதிபராகப் பதவியேற்றதும் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் ஒன்றுதான் இறக்குமதி வரி விதிப்பு. அண்டை நாடுகளுக்கு இறக்குமதி வரியை அதிகரித்ததோடு மட்டுமல்லாது இந்தியா உள்ளிட்ட ப்ரிக்ஸ் நாடுகளுக்கும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் முதலீட்டார்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதி அதன் மீதான முதலீட்டை அதிகரிப்பதாலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார மந்தநிலை, போர்ப் பதற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் கூட நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் போது அடுத்த இரண்டு ஆண்டுகளில் தங்கம் விலை பல மடங்கு உயரும் என துறை சார் நிபுணர்கள் கூறுகின்றன. மேலும் வாசிக்க>> ட்ரம்ப்பின் வரி விதிப்பு எச்சரிக்கையின் தாக்கம் என்ன? - ரகுராம் ராஜன் ‘அலர்ட்’ கருத்துகள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT