Published : 19 Jan 2025 01:51 AM
Last Updated : 19 Jan 2025 01:51 AM
புதுடெல்லி: கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு 6-வது அணு உலையை ரஷ்யா அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதலாவது அணு உலை கடந்த 2013-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. இதில்தான் அணு எரிபொருளான யுரேனியம் வைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். மிகவும் தடிமனான எஃகு மூலம் தயாரிக்கப்படும் இந்த அணு உலை 320 டன்கள் எடை கொண்டது. ரஷ்ய அணு சக்தி கழகமான ரோசாடாம்-ன் அடாம்மாஷ் ஆலையில் இது தயாரிக்கப்படுகிறது.
இரண்டாவது அணு உலை 2016-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. இந்த 2 அணு உலைகளும் மின்சார உற்பத்தி பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் கூடங்குளத்தில் 3-வது மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்கும் கட்டுமானம் கடந்த 2017-ல் தொடங்கியது. இவற்றில் 73 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. 5-வது மற்றும் 6-வது அணு உலை அமைக்கும் பணிகள் 3-ல் ஒரு பங்கு நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில் இங்கு வைக்கப்பட வேண்டிய 6-வது அணு உலையை ரஷ்யா இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது. கப்பல் மூலம் 11,000 கி.மீ பயணம் செய்து இந்த அணு உலை இந்தியா வந்து சேரும். இங்கு அணு உலை கட்டுமான பணிகளில் ரஷ்யாவின் ரோசாடாம் நிறுவன பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு தேவையான 4 நீராவி ஜெனரேட்டர்களையும், இந்தியாவுக்கு இந்த ஆண்டில் ரஷ்யா அனுப்பி வைக்கவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT