Published : 18 Jan 2025 09:39 PM
Last Updated : 18 Jan 2025 09:39 PM
காரைக்குடி: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், “டாலர் மதிப்பை வைத்து பொருளாதார நிலையை அளவிட முடியாது. டாலர் மதிப்பு உயர்வு பல பின்விளைவுகளை ஏற்படுத்தும்” என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “டாலர் மதிப்பை வைத்து பொருளாதார நிலையை அளவிட முடியாது. டாலர் மதிப்பு உயர்வு பல பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஏற்றுமதியாளர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். ஆனால், இறக்குமதி பொருட்களின் விலை உயரும். கருப்பொருட்களின் விலை அதிகரிக்கும். பணவீக்கமும் உயரும். வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு செலவு அதிகரிக்கும்.
இந்தியாவில் நுகர்வு குறைந்துவிட்டது. பல நிறுவனங்களின் தலைவர்களே வாங்கும் சக்தி குறைந்துவிட்டதாக கூறுகின்றனர். இது நாட்டுக்கு நல்லது அல்ல. உற்பத்தி குறையும். ஊரக பகுதிகளில் நுகர்வு அதிகளவில் குறைந்துள்ளது. அதை கூட்ட சலுகைகள் அளிக்க வேண்டும்.
ஜிஎஸ்டி முறையில் தவறு உள்ளது. குளறுபடிகளை சரிசெய்ய வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், செவிடன் காதில் ஊதும் சங்காக மத்திய அரசு உள்ளது. நுகர்வு கூடினால் உற்பத்தி கூடும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும். ஊரக பகுதிகளில் 5 ஆண்டுகளாக கூலி உயரவில்லை. அதுவும் நுகர்வு குறைய காரணம். கட்டமைப்பில் முதலீடு செய்தால் சரியாகவிடும் என்று நினைக்கிறார்கள். கட்டமைப்பில் தரம் இல்லை. பாலம் கட்டினால் இடிந்துவிடுகிறது. நெடுஞ்சாலை சேதமாகிவிடுகிறது. கட்டமைப்பில் தரத்தை அவர்கள் கவனிப்பதில்லை.
டெல்லி தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு கொஞ்சம் சிக்கல் தான். அங்கு காங்கிரஸ் சில இடங்களில் கால் ஊன்றினால் மகிழ்ச்சி அடைவேன். இலங்கை அதிபரை சந்தேகப்பட தேவையில்லை. நம்மோடு நல்ல உறவில் உள்ளார். இலங்கைக்கு துன்பம் என்றால் இந்தியா தான் உதவ முடியும் என்பதை அறிந்துள்ளார். இண்டியா கூட்டணிக்கு தவெக வந்தால் நல்லது தான்.
நேரு காலத்திலும் சீனா ஆக்கிரமிப்பு செய்தது. மோடி காலத்திலும் ஆக்கிரமித்துள்ளது. ஆனால், அதை அவர் ஏற்க மறுக்கிறார். ஆக்கிரமிப்பே இல்லை என்றால் எப்படி சீனாவை அங்கிருந்து அகற்ற முடியும்,” என்று ப.சிதம்பரம் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT