Published : 18 Jan 2025 02:07 PM
Last Updated : 18 Jan 2025 02:07 PM
வாஷிங்டன்: 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச நாணய நிதியம் (IMF) கணித்துள்ளது.
உலக பொருளாதாரம் குறித்த தனது கணிப்பை அறிக்கையாக கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிட்ட ஐஎம்எஃப், அதன் தொடர்ச்சியாக தனது புதிய அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், கடந்த அக்டோபர் மாதத்தில் கணிக்கப்பட்டபடி இந்தியாவில், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதம் தொடங்கும் அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.7 சதவீதம் வளர்ச்சியடையும் என்று உலக வங்கி கணித்திருந்தது. அதைத் தொடர்ந்து, நடப்பு நிதியாண்டை விட சற்று அதிகமாகவும், வளர்ச்சிக் கணக்கில் தொடர்ந்து முதலிடத்திலும் இந்தியா இருக்கும் என்று ஐஎம்எஃப் கணித்துள்ளது.
உலகப் பொருளாதாரம் நிலையாக உள்ளதாகவும், உலக பொருளாதார வளர்ச்சி 2025 மற்றும் 2026ல் 3.3 சதவீதமாக இருக்கும் என்றும் ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 2025-ல் 2.7 சதவீதமாகவும், 2026-ல் 2.1 சதவீதமாகவும் இருக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார வளர்ச்சி 2025-ல் 1 சதவீதமாகவும், 2026-ல் 1.4 சதவீதமாகவும் இருக்கும். ஜெர்மனியின் பொருளதார வளர்ச்சி 2025-ல் 0.3 சதவீதமாகவும், 2026-ல் 1.1 சதவீதமாகவும் இருக்கும். பிரான்ஸ்ன் பொருளாதார வளர்ச்சி 2025-ல் 0.8 சதவீதமாகவும், 2026-ல் 1.1 சதவீதமாகவும் இருக்கும். இத்தாலியின் பொருளாதார வளர்ச்சி 2025-ல் 0.7 சதவீதமாகவும், 2026-ல் 0.9 சதவீதமாகவும் இருக்கும் என்று ஐஎம்எஃப் அறிக்கை தெரிவிக்கிறது.
இதேபோல், ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி 2025-ல் 1.1 சதவீதமாகவும், 2026-ல் 0.8 சதவீதமாகவும் இருக்கும். இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சி 2025-ல் 1.6 சதவீதமாகவும், 2026ல் 1.5 சதவீதமாகவும் இருக்கும். கனடாவின் பொருளாதார வளர்ச்சி 2025 மற்றும் 2026-ல் 2 சதவீதமாக இருக்கும். சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2025-ல் 4.6 சதவீதமாகவும், 2026-ல் 4.5 சதவீதமாகவும் இருக்கும். பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி 2025-ல் 3 சதவீதமாகவும், 2026-ல் 4 சதவீதமாகவும் இருக்கும் என்று ஐஎம்எஃப் கணித்துள்ளது.
“தொற்றுநோய்க்குப் பிறகு இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் உலகளாவிய வளர்ச்சி 3.3 சதவீதமாக நிலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் சீராகக் குறைந்து வருகிறது. இந்த ஆண்டு 4.2 சதவீதத்தையும் அடுத்த ஆண்டு 3.5 சதவீதத்தையும் இது எட்டுகிறது.” என்று ஐஎம்எஃப் தலைமைப் பொருளாதார நிபுணரும் ஆராய்ச்சி இயக்குநருமான பியர்-ஆலிவர் கவுரிஞ்சாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “பணவீக்க அபாயங்களை நிவர்த்தி செய்ய பணவியல் கொள்கை சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். நிதிக் கொள்கைகள் மிகவும் நிலையான அடித்தளத்தில் வைக்கப்பட வேண்டும்.” என்று கூறியுள்ளார். பணவீக்கம் குறைந்து வருவதால், அடுத்த மாதம் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT