Published : 17 Jan 2025 12:52 PM
Last Updated : 17 Jan 2025 12:52 PM

சோதனையின் போது விண்ணில் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ’ஸ்டார்ஷிப்’ ராக்கெட்

டெக்சாஸ்: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வியாழக்கிழமை அன்று ஸ்டார்ஷிப் ராக்கெட்டை சோதனை முயற்சியாக விண்ணில் ஏவியது. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட 8-வது நிமிடத்தில் அது வெடித்து சிதறியது. இதற்கான காரணத்தை கண்டறிய அந்த நிறுவனத்தின் விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.

“ஸ்டார்ஷிப் சோதனை முயற்சியின் போது விண்ணை நோக்கி சென்ற ராக்கெட் எதிர்பாராமல் திட்டமிடப்படாத வகையில் டிஸ்-அசெம்பிள் ஆனது. இதற்கான காரணம் குறித்து எங்களது குழு ஆய்வு செய்ய உள்ளது. இது மாதிரியான சோதனைகள் மூலமாகவே நாங்கள் வெற்றியை அறிந்துள்ளோம். இது நிச்சயம் ஸ்டார்ஷிப்பின் நம்பகத்தன்மையை அதிகரிக்க செய்யும் என நம்புகிறோம்.” என ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது.

இதை நேரலையில் ஸ்பேஸ் எக்ஸ் வீடியோ ஸ்ட்ரீம் செய்தது. மேலும், இந்த நிகழ்வை காண ஏராளமான மக்கள் ராக்கெட் ஏவுதளத்தில் கூடி இருந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸின் பிரவுன்ஸ்வில்லுக்கு அருகிலுள்ள தெற்கு பாட்ரே தீவு பகுதியில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது.

ஸ்டார்ஷிப்பின் 7-வது ராக்கெட் சோதனை இது. முற்றிலும் முந்தைய முயற்சிகளை காட்டிலும் மேம்படுத்தப்பட்ட வகையில் இது வடிவமைக்கப்பட்டது. இதில் ராக்கெட்டின் பூஸ்டர் பத்திரமாக பூமிக்கு திரும்பியது. அது லான்ச் பேடுக்கு வந்ததும் அப்படியே அதை கேட்ச் செய்தது ‘சாப்ஸ்டிக்ஸ்’. இப்படி ராக்கெட் பூஸ்டரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பத்திரமாக கேட்ச் செய்வது இது இரண்டாவது முறையாகும். கடந்த அக்டோபரில் முதல் முறையாக அதை செய்து காட்டியது. அப்போது உலகமே அதை வியந்து பார்த்தது.

ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து 146 கிலோமீட்டர் தொலைவில், 21317 கிலோமீட்டர் வேகத்தில் ஸ்டார்ஷிப் (டெஸ்ட் ரன்) சென்றபோது தீப்பற்றி வெடித்து சிதறியது. அதோடு தரை கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டானது. இந்த ராக்கெட்டை கொண்டுதான் செவ்வாய் கிரகத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, புளோரிடாவில் ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனம் நியூ க்ளென் ராக்கெட்டை விண்ணில் ஏவியது. முதல் பயணத்திலேயே பூமிக்கு பல மைல் தொலைவில் ஆய்வு அடிப்படையிலான செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியது நியூ க்ளென். இருப்பினும் அதன் பூஸ்டரை கேட்ச் செய்யும் முயற்சி தோல்வி அடைந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x