Published : 13 Jan 2025 02:36 AM
Last Updated : 13 Jan 2025 02:36 AM
இந்தோனேசியாவுக்கு பிரம்மோஸ் ஏவுகணையை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: 290 கி.மீ. வரை சென்று இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணையை ஏற்றுமதி செய்வது தொடர்பாக இந்தோனேசியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 450 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.3,870 கோடி மதிப்பிலான இந்த ஏற்றுமதி ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
ஏவுகணை ஏற்றுமதி பட்ஜெட் தொடர்பான பேச்சுவார்த்தையில் சில முட்டுக்கட்டைகள் இருந்தபோதிலும் முடிவை நோக்கிய விவாதங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதையடுத்து அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பிலிப்பைன்ஸ் இந்தியாவிடமிருந்து 375 மில்லியன் டாலருக்கு கப்பல் எதிர்ப்பு கடலோர ஏவுகணை பேட்டரியை வாங்குவதற்கு கடந்த 2022 ஜனவரியில் ஒப்பந்தம் செய்தது. இதனைத் தொடர்ந்து ஆசிய நாடுகளுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்வதற்கான பேச்சுவார்த்தையும் சூடுபிடித்தது.
ரஷ்யாவுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள பிரம்மோஸ் ஏவுகணைகள் மட்டுமின்றி இந்தியா உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ள ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. ஆகாஷ் ஏவுகணை அமைப்பு, 25 கி.மீ. தொலைவில் உள்ள எதிரிகளின் விமானங்கள், ட்ரோன்கள், சப்சோனிக் கப்பல் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT