Published : 12 Jan 2025 10:31 AM
Last Updated : 12 Jan 2025 10:31 AM
சென்னை: பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு விமானங்களில் அதிக அளவில் மக்கள் செல்வதால் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். ரயில்கள், பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. டிக்கெட் கிடைக்காதவர்கள், விமானங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர். இதனால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும், விமான டிக்கெட்கள் கட்டணங்களும் பல மடங்கு அதிகரித்துள்ளன.
சென்னை - மதுரை வழக்கமான கட்டணம் ரூ.3,999. ஆனால், நேற்று ரூ.17,645 ஆகவும், சென்னை - திருச்சி ரூ.2,199-ல் இருந்து ரூ.14,337 ஆகவும், சென்னை - கோவை ரூ.3,485-ல் இருந்து ரூ.16,647 ஆகவும், சென்னை - தூத்துக்குடி ரூ.4,199-ல் இருந்து ரூ.12,866 ஆகவும், சென்னை - திருவனந்தபுரம் ரூ.3,296-ல் இருந்து ரூ.17,771 ஆகவும், சென்னை - சேலம் ரூ.2,799-ல் இருந்து ரூ.9,579 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதில் சென்னை - தூத்துக்குடி, சென்னை - சேலம் இடையேயான விமானத்தில் நேற்று அனைத்து டிக்கெட்களும் முடிந்துவிட்டன. தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் பெரும்பாலும் சென்னை - திருவனந்தபுரம் விமானங்களில் பயணம் செய்கின்றனர். இதனால், இந்த விமானங்களில் டிக்கெட் கட்டணம் 5 மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT