Last Updated : 26 Dec, 2024 01:33 PM

2  

Published : 26 Dec 2024 01:33 PM
Last Updated : 26 Dec 2024 01:33 PM

கடலூர் மாவட்ட வங்கிகளில் நகைக் கடனுக்கு வட்டி கட்டி உடனே புதுப்பிக்க மறுப்பு!

கடலூர்: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், நகைக் கடனுக்கு தனியார் வங்கிகளை விடவும், வட்டிக் கடைகளை விடவும் வட்டி குறைவு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதன் காரணமாக எளிய, நடுத்தர குடும்பத்தினர், கிராமப்புற விவசாயிகள் தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகளையே நம்பியிருக்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் பரவலாக விவசாயப் பணிகளுக்கும், குடும்ப செலவுக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தங்களது நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று வருகின்றனர்.

நகைக்கடன் பெற்ற வாடிக்கையாளர்கள், கடன் பெற்று ஓராண்டு முடியும் போது வட்டி கட்டி கடனை மீண்டும் புதுப்பித்து வந்தனர். இவ்வாறாக நகை ஏலத்துக்கு செல்லாமல், பணம் நெருக்கடியான சூழலிலும் தங்கள் நகைகளை பாதுகாத்து வந்தனர். இந்த காரணத்தால் கடந்த சில ஆண்டுகளில் எளிய மக்களின் மிகப்பெரும் நம்பிக்கையாக தேசிய மயமாக்கப்பட்டவங்கிகள் உருவெடுத்து நிற்கின்றன.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில். நகைக்கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் தங்களது நகைக் கடனுக்கு வட்டிக்கட்டி உடனே புதுப்பிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. அதாவது, வட்டியை மட்டும் கட்டி நகைக் கடனை புதுப்பிக்க மறுத்து வருகிறது. “கடனுக்கான முழுத் தொகைகையும் கட்டி, நகையை மீட்டு விடுங்கள்; பின்னர் நகையை வைத்து புதிய கடன் பெறுங்கள்” என்று வங்கி நிர்வாகம் கறாராக தெரிவிக்கிறது.

இப்படியான சூழலில் நகை ஏலத்துக்கு செல்லாமல் தடுக்க, குறிப்பிட்ட தேதியில் நகையை மீட்க, வேறு வழியின்றி அதிக வட்டிக்கு வெளியில் பணத்தை வாங்கி, நகையை மீட்டு, மறுபடியும் அடகு வைக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள், பொது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களை குறிவைத்து மீட்டர் வட்டிக்காரர்கள் வர, அது ஒரு தனிவட்டியாக வந்து தொல்லை தருகிறது. குறைந்த நேரத்தில் மீண்டும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அடகு வைக்கப்பட்டாலும், அந்த இடைப்பட்ட நேரத்தில் வெளிநபர்களை அணுகும் சூழலை இந்த புதிய முறை ஏற்படுத்துவதாக கடலூர் மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

“முன்பெல்லாம், நகை அடகு வைத்து ஒரு வருடம் முடியும் நிலையில் வங்கியில் இருந்து அழைப்பு வரும். மீட்க முடியாத சூழலில், ஏற்கெனவே உள்ள கடனுடன், வட்டிக் கணக்கைச் சேர்த்து அதே நகையில் கணக்கிட்டு, புதிய நகைக்கடனாக எடுத்துக் கொள்வார்கள். இப்போதும் நகைக்கடன் தருகிறார்கள்.

ஆனால், பழைய நகைக்கடனுக்கான தொகையை கட்டி நகையை மீட்டு, மீண்டும் வைக்கச் சொல்கிறார்கள். இந்த இடைப்பட்ட பரிமாற்றத் தொகைக்காக அலைந்து, வட்டிக்காரர்களிடம் வசமாக மாட்டிக் கொள்கிறோம்” என்று தங்களின் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர். சமயத்தில், மீட்ட நகையை அடகு வைக்க, அதே நாளில் அனுமதிப்பதில்லை. இந்த தாமதத்தை வெளியில் உள்ள கந்து வட்டிக்காரர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

உதாரணத்துக்கு, ரூ.1 லட்சத்துக்கு நகையை அடமானம் வைத்துள்ளவர்கள், நகையை மீட்க வெளிநபர்களிடம் நாள் வட்டிக்கு பணம் கேட்கின்றனர். அவர்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் என்ற வட்டி வீதத்தில் இந்த கொடும் வட்டிக்காரர்கள் கடன் கொடுக்கின்றனர். கந்து வட்டியை ஊக்குவிக்கும் இச்செ யலை உடனே தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் நிர்வாகங்கள் நிறுத்த வேண்டும். நகைக்கடனில் பழைய நிலையை தொடர வேண்டும் என்பதே கடலூர் மாவட்ட மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x