Published : 10 Dec 2024 12:41 PM
Last Updated : 10 Dec 2024 12:41 PM
வீடு வாங்க விழைவோர் முதலில் எந்தப் பகுதியில் வீடு வாங்குவது என தீர்மானிக்க வேண்டும். அதற்கான செக் லிஸ்ட் குறிப்புகள் இவை...
> உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அந்த வீடு இருக்கும் இடம் ஏற்றதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அலுவலகத்துக்குச் செல்லும் ஒவ்வொருவருக்கும் அந்தப் பகுதியிலிருந்து அலுவலகம் செல்ல போதிய போக்குவரத்து வசதி இருக்க வேண்டும். இந்த அடிப்படையை மனத்தில் கொள்ளவில்லை என்றால் தினசரி வாழ்க்கையே சிலருக்கு நரகம் ஆகிவிடும். ஏனென்றால், பயணிப்பது என்பது தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதி.
> வீட்டிலிருந்து அருகிலிருக்கும் பேருந்து நிலையம் அல்லது மெட்ரோ ஸ்டேஷன் எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதைக் கணக்கிடுங்கள். சற்று அதிகத் தொலைவு என்றால் தினசரியோ தேவைப்படும்போதோ ஆட்டோ வசதி இருக்குமா என்பதையும் கணக்கிடுங்கள். இவற்றையெல்லாம் உங்கள் பட்ஜெட் தாங்குமா என்பதையும் யோசியுங்கள்.
> குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் வீட்டின் அருகில் இருப்பது அவசியம்.
> உங்கள் வீட்டில் இரவு ஷிப்டுகளில் வேலை செய்பவர் யாராவது இருந்தால் உங்கள் வீட்டுப் பகுதி மேலும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். தெரு விளக்குகள் உள்ளனவா, அவை சரிவரப் பராமரிக்கப்படுகின்றனவா என்பதையெல்லாம் பார்ப்பதும் முக்கியம். அந்தப் பகுதியில் எந்த அளவு குற்றங்கள் நடக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்வதுகூட ‘அதிகப்படி எச்சரிக்கை’என்று ஆகாது.
> எந்தச் சூழலில் அந்த வீடு இருக்கிறது என்பதும் முக்கியம். அருகிலேயே மிகப் பெரிய சாக்கடை இருக்கிறது என்றாலோ, அருகில் நச்சுப்புகையை வெளியிடும் தொழிற்சாலை ஏதாவது இருக்கிறது என்றாலோ அது உங்கள் உடல் நலத்தைப் பெரிதும் பாதிக்க வாய்ப்பு உண்டு.
> வாங்கும் வீட்டில் நீங்கள் தங்கப் போகிறீர்களா, அல்லது ஒரு முதலீடு என்கிற கோணத்தில் அதை வாங்கப் போகிறீர்களா, நீங்கள் தங்குவதாக இருந்தால் உடனடியாக அங்கே செல்வீர்களா, வாடகைக்கு விட வேண்டுமென்றால் வீட்டுக்கு அருகே பெரும் அலுவலகங்கள் அல்லது தொழிற்சாலைகள் உள்ளனவா (அப்போதுதான் உங்கள் வீட்டுக்குக் குடிவருவதில் டிமாண்ட் இருக்கும்) என கவனிக்கவும்.
> சில பகுதிகளில் உள்ள நிலங்கள் சட்டச் சிக்கலில் மாட்டிக் கொண்டு நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக் கொண்டிருக்கும். நில உச்சவரம்புச் சட்டம் போன்றவற்றால் சில நிலங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். உள்ளூர் அதிகாரிகளை அணுகி இப்படியெல்லாம் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
> மழைக்காலத்தில் ஒரு வீட்டை வாங்கினால் எந்த அளவுக்குச் சுற்றிலும் தண்ணீர் தேங்குகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால், அதே நேரம் அங்கு கோடைக் காலத்தில் கடும் தண்ணீர்த் தட்டுப்பாடு இருக்குமா என்பதை அறிந்து கொள்வது கஷ்டம். அந்தப் பகுதியில் சிறிது காலமாக வசிப்பவர்களை அணுகி இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வது நல்லது.
> பல்வேறு காரணங்களுக்காக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிற இடமாகவும் அது இருந்துவிடக் கூடாது. வைஃபை வசதி தரமானதாக இருக்கிறதா என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏதோ காரணத்தால் அந்தப் பகுதியில் இணைய வசதி தடையின்றிக் கிடைக்காமல் இருக்கலாம்.
> உங்கள் வீட்டுக்குள் அனைத்து வசதிகளும் இருந்துவிட்டால் போதாது. சுற்றிலும் வங்கி, மருத்துவமனை, பூங்கா, கடைத்தெரு போன்றவையும் இருக்க வேண்டும். இவற்றின் தேவை நமக்குத் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இவற்றில் எல்லாம் கவனம் செலுத்தினால்தான் நாம் வருங்காலத்தில் மகிழ்வுடன் இருக்க முடியும். ஏனென்றால், வீட்டுக்கான முதலீடு என்பது நம்மால் அடிக்கடி மாற்றிக் கொள்ள முடியாத ஒன்று. - ஜி.எஸ்.எஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT