Published : 09 Dec 2024 10:09 AM
Last Updated : 09 Dec 2024 10:09 AM
சென்னை: பாட்டிலை முன்கூட்டியே ‘ஸ்கேன்’ செய்யக்கூடாது எனவும், மதுபான விற்பனைக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும் எனவும் மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை தற்போது கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. தற்போது ராமநாதபுரம், அரக்கோணம், காஞ்சிபுரம் (வடக்கு), காஞ்சிபுரம் (தெற்கு), கரூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்குபவர்களுக்கு ரசீது வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விற்பனையாளர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றாமல், தவறான செயல்பாடுகளில் ஈடுபடுவதாக டாஸ்மாக் நிர்வாகத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர், அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
கணினி மயமாக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளின் விற்பனை அறிக்கையில், சில மதுபான சில்லறை விற்பனை கடைகளிலிருந்து குறுஞ்செய்தி வாயிலாக பெறப்பட்ட விற்பனை புள்ளி விவரங்களுக்கும், கையடக்க கருவி வாயிலாக பெறப்பட்ட விற்பனை புள்ளி விவரங்களுக்கும் இடையே அதிக அளவில் விற்பனை வித்தியாசங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது. இதை தடுக்கும் வகையில் டாஸ்மாக் நிர்வாகத்தின் வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
மதுபான சில்லறை விற்பனை கடைகளில், வாடிக்கையாளர்கள் விரும்பி கேட்கும் மதுபானங்களுடன் அதற்குண்டான ரசீது கண்டிப்பாக வழங்க வேண்டும். மதுபானங்களை விற்பனை செய்யும்போது மட்டுமே பாட்டில்களை ஸ்கேன் செய்ய வேண்டும். மதுபானங்களை முன்கூட்டியே ஸ்கேன் செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது.
இதனால், விற்பனைக்கும், இருப்புக்கும் வித்தியாசம் ஏற்படுகிறது. இதை கடைக்காரர்கள் சரி செய்ய வேண்டும். தவறான செயல்பாடுகளை கண்காணிக்க தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர் மற்றும் உதவி மேலாளர் ஆகியோரே இதற்கு முழு பொறுப்பாவார்கள். அவர்களிடம் துறைரீதியான உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT