Published : 08 Dec 2024 10:22 AM
Last Updated : 08 Dec 2024 10:22 AM

”2047-க்குள் சிறந்த துறைமுகங்களை கொண்ட 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழும்”

காமராஜர் துறைமுகத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, துறைமுகத்தின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி குறித்த புத்தகத்தை மத்திய கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் வெளியிட்டார். விழாவில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, சென்னை துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால். துணைத் தலைவர் விஸ்வநாதன். காமராஜர் துறைமுகத்தின் மேலாண்மை இயக்குநர் ஐரின் சிந்தியா, ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை தீபிகா பல்லிகல், திரைப்பட நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை: ‘2047-ம் ஆண்டுக்குள் உலக அளவில் சிறந்த துறைமுகங்களை கொண்ட 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும்’ என மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்தார்.

சென்னை துறைமுக ஆணையத்தின் துணை நிறுவனமான காமராஜர் துறைமுகம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, வெள்ளி விழா கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. வரவேற்புரை ஆற்றி காமராஜர் துறைமுகத்தின் மேலாண்மை இயக்குநர் ஐரீன் சிந்தியா பேசும்போது, “காமராஜர் துறைமுகம் 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது 2001-ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது. 2023-24-ம் ஆண்டு 45.28 டன் சரக்குகள் கையாளப்பட்டன. வரும் 2047-ம் ஆண்டுக்குள் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 254 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும். மேலும், தற்போது 9 ஆக உள்ள கப்பல்களை நிறுத்தும் தளம் 27 ஆக அதிகரிக்கப்படும்” என்றார்.

இவ்விழாவில், மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது: இந்தியா சுதந்திரம் பெற்று 100-வது ஆண்டு 2047-ம் ஆண்டு கொண்டாடப்பட இருக்கிறது. அப்போது உலக அளவில் சிறந்த துறைமுகங்களை கொண்ட 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும். இதற்கான பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தீட்டி செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது சென்னை மற்றும் ரஷ்யாவில் உள்ள விளாடிவோஸ்டாக் கிழக்கு கடல் வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன்மூலம் வணிக முன்னேற்றம், துறைமுக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. துறைமுக வளர்ச்சிக்கு மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு தமிழக அரசும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. உலக அளவில் பொருளாதார ரீதியில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் முதல் 3 நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக அரசு பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தனது உரையில், “சென்னை துறைமுகத்தில் நெரிசலைக் குறைக்கும் வகையில் காமராஜர் துறைமுகம் தொடங்கப்பட்டது. இதற்கான நிலத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி கையகப்படுத்திக் கொடுத்தார்.

காமராஜர் துறைமுகத்துடன் கொல்கத்தா, பெங்களூரு, கிழக்கு கடற்கரை உள்ளிட்ட சாலைகளை இணைக்கும் வகையில் 132 கி.மீ. நீளத்தில் ரூ.17,212 கோடி மதிப்பீட்டில் வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டு வரப்படுகிறது. நாட்டின் 12-வது பெரிய துறைமுகமாக காமராஜர் துறைமுகம் உள்ளது. இத்துறைமுகத்தின் வளர்ச்சிக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்” என்றார்.

இவ்விழாவில், காமராஜர் துறைமுகம் குறித்த விளக்க புத்தகம் (காபி டேபிள் புக்) வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரூ.520 கோடி மதிப்பீட்டிலான 4-ம் கட்ட மூலதன அகழாய்வு (தூர்வாரும்) திட்டம், ரூ.37 கோடி மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் லிட்டர் கடல்நீரை சுத்திகரிக்கும் ஆலை, ரூ.25 கோடி செலவில் துறைமுகத்துக்கான ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்கு அமைச்சர் சர்பானந்தா சோனாவால் அடிக்கல் நாட்டினார்.

இவ்விழாவில், சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களின் தலைவர் சுனில் பாலிவால், துணைத் தலைவர் விஸ்வநாதன், ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை தீபிகா பல்லிகல், நடிகை ஆண்ட்ரியா ஜெர்மியா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x