Published : 08 Dec 2024 06:57 AM
Last Updated : 08 Dec 2024 06:57 AM
சென்னை: தமிழக உணவு பாரம்பரியத்தில் சாம்பாருக்கு முக்கிய இடம் உள்ளது. அதிலும் முருங்கைக்காய் சாம்பாருக்கு முக்கியத்துவம் அதிகம். பச்சிளம் குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை முருங்கை நீக்குகிறது. கோவை அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள தகவல் தொகுப்பில், 100 கிராம் முருங்கைக் காயில் கால்சியம் 30 மில்லி கிராம், மக்னீசியம் 24 மி.கி. ஆக்சாலிக் அமிலம் 101 மி.கி. பாஸ்பரஸ் 110 மி.கி. பொட்டாசியம் 259 மி.கி, கந்தகம் 137 மி.கி. வைட்டமின் பி-கோலின் 423 மி.கி. வைட்டமின் சி 120 மி.கி. இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக முருங்கைக் காயின் விலை உயர்ந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் செப்டம்பர் மாதத்தில் கிலோ ரூ.10 ஆக விலை வீழ்ச்சி அடைந்திருந்தது. இந்நிலையில் தற்போது மொத்த விலையில் ரூ.100 முதல் ரூ.300 வரையிலும், சில் லறை விற்பனையில் ரூ.250 முதல் ரூ.400 வரையிலும் விற்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விலை ஏற்றம் குறித்து மதுரையில் உள்ள அரசின் முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மைய அதிகாரிகள் கூறியதாவது: உலக அளவில் உற்பத்தியாகும் முருங்கைக் காயில் 24 சதவீதம் தமிழகத்தில் உற்பத்தியாகிறது. தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இங்கு கடந்த நிதியாண்டில் 20,742 ஹெக்டேர் பரப்பளவில் முருங்கை பயிரிடப்பட்டது. 8 லட்சத்து 41,807 டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முருங்கைக்காய் உற்பத்தியில் திண்டுக்கல் மாவட்டம் 5,625 ஹெக்டேர் பரப்புடன் முதலிடத்திலும் 3,247 ஹெக்டேர் பரப்புடன் கரூர் மாவட்டம் 2-வது இடத்திலும், 2,822 ஹெக்டேர் பரப்புடன் தேனி மாவட்டம் 3-ம் இடத்திலும் உள்ளன.
பருவமழை தீவிரமாக இருக்கும் அக்டோபர்- நவம்பர் மாதங்களிலும், பலத்த காற்று வீசும் ஜூலை- ஆகஸ்ட் மாதங்களிலும் அதிக அளவில் முருங்கை பயிரில் பூக்கள் உதிரும். பனிபொழியும் டிசம்பர்- ஜனவரி மாதங்களில் பூக்கள் உருவாகாது. அதனால் இக்காலகட்டங்களில் உற்பத்தி குறைந்து, விலை உயர்ந்துவிடும். இந்நிலையம் சார்பில் கடந்த 20 ஆண்டுகளாக மதுரை உழவர் சந்தையில் முருங்கைக்காய் விலையை கண்காணித்து வருகிறோம்.
அதன்படி, நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை முருங்கைக்காய் விலை உயர்ந்தே இருந்திருக்கிறது. சராசரியாக டிசம்பர் மாதத்தில் ரூ.125, ஜனவரியில் ரூ.110, நவம்பர் மாதத்தில் ரூ.85, பிப்ரவரி மாதத்தில் ரூ.78-க்கு விற்பனையாகியுள்ளது. மார்ச் முதல் அக்டோபர் வரை ரூ.24 முதல் ரூ.60 வரை விற்பனையாகியுள்ளது. அதனாலேயே இந்த ஆண்டும் டிசம்பர் மாதத்தில் விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் கிலோ ரூ.400 வரை சென்றது குறித்து கோயம்பேடு சிறுமொத்த காய்கறி வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் எஸ்.எஸ்.முத்துக்குமாரிடம் கேட்டபோது, இப்போது தமிழகத்தில் எந்த மாவட்டத்திலிருந்தும் கோயம்பேடு சந்தைக்கு முருங்கைக்காய் வரவில்லை.
மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் இருந்துதான் வருகிறது. முன்பு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டன. 2 நாட்களுக்கு மேல் பயணிப்பதால் வாடிவிடுகிறது. அதனால் தற்போது விமானங்களில் முருங்கைக் காய் கொண்டுவரப்படுவதால் விலை உயர்ந்துள்ளது” என்றார்.
முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ள நிலையில், ஓட்டல்களில் முருங்கைக்காய் பயன்பாடு எப்படி உள்ளது என சென்னை ஓட்டல் சங்கத் தலைவர் என்.ரவியிடம் கேட்டபோது, “தக்காளிக்கு மாற்று புளி. முருங்கைக்காய்க்கு மாற்று முருங்கைக்காய் தான். ஒரு கிலோ பருப்புக்கு 300 கிராம் என்ற அளவில் முருங்கைக்காய் பயன்படுத்துவோம். இப்போது பயன்பாட்டை 75 சதவீதம் குறைத்து தான் சாம்பார் தயாரித்து வருகிறோம்” என்றார்.
மழை மற்றும் பனி காலங்களில் பூக்கள் உதிர்வதை தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “பிளாஸ்டிக் உறைகளை கொண்டு முருங்கை மரங்களை மூடி, மழை காலங்களில் பூக்களை பாதுகாக்க முடியுமா என அரசின் 8 தோட்டக்கலை பண்ணைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT