Last Updated : 21 Nov, 2024 07:55 PM

 

Published : 21 Nov 2024 07:55 PM
Last Updated : 21 Nov 2024 07:55 PM

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்க திட்டம் நிலை என்ன? - அப்டேட் விவரம்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள விமான நிலையத்தை விரிவாக்குவதற்கான திட்ட வரைபடத்துக்கு மத்திய விமான நிலைய ஆணையம் அனுமதித்துள்ளதாக இயக்குநர் ராஜசேகர ரெட்டி கூறினார். தோராய விலை நிர்ணயத்தை தமிழக அரசு புதுச்சேரிக்கு அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலைய வளாகத்தில் அதன் விரிவாக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன் மற்றும் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் கலைவாணன், நியமன உறுப்பினர்கள் 3 பேர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்துக்கு புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் ராஜசேகர ரெட்டி தலைமை வகித்தார்.

இக்கூட்டம் தொடர்பாக ராஜசேகர ரெட்டி கூறியது: "புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழக அரசிடமிருந்து 250 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கான இடம் அடையாளம் காணும் பணி நிறைவடைந்துவிட்டது. புதுவை அரசின் கழிவுநீர் சுத்திகரிப்பு மைய வளாக இடமும் கையகப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. அதன் அடிப்படையில் விமான நிலைய விரிவாக்கத் திட்ட வரைபடத்துக்கு மத்திய விமான நிலைய ஆணையமும் அனுமதி வழங்கியுள்ளது.

விமான நிலைய விரிவாக்கத்துக்கான தமிழக அரசின் நிலத்துக்கு விலை நிர்ணயம் தோராயமாக புதுவை அரசுக்கு வழங்கப்படவுள்ளது. அதன்படி மத்திய அரசிடம் நிதி பெற்று விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தொடங்கப்படும். தற்போது தனியார் விமான சேவை நிறுவனம் 19 பேர் செல்லும் விமானத்தை இயக்க முன்வந்துள்ளது. விமான சேவை தொடங்கும் நிலையில், பயணிகளுக்கான உணவு உள்ளிட்ட அரங்குகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று ராஜசேகர ரெட்டி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x