Published : 14 Nov 2024 04:14 AM
Last Updated : 14 Nov 2024 04:14 AM
புதுடெல்லி: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23.14 லட்சம் வாகனங்கள் விற்பனையான நிலையில், இவ்வாண்டு அக்டோபரில் 25.86 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது 12 சதவீதம் அதிகமாகும். இவற்றில் இருசக்கர வாகன விற்பனை 14.2 சதவீதம் உயர்ந்து 21.64 லட்சமாகவும், கார்கள் விற்பனை 1 சதவீதம் உயர்ந்து 3.93 லட்சமாகவும் உள்ளன. மூன்று சக்கர வாகன விற்பனை 0.7% சரிவு கண்டுள்ளது.
அக்டோபர் மாதத்தில் தீபாவளி, தசரா உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்பட்டன. இதன் காரணமாக வாகன விற்பனை உயர்ந்திருப்பதாக சியாம் தெரிவித்துள்ளது. அதேபோல் வாகன ஏற்றுமதி 22.4 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023 அக்டோபர் மாதம் 3.71 லட்சம் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் இவ்வாண்டு அக்டோபரில் அது 4.54 லட்சமாக உயர்ந்துள்ளது என்று சியாம் குறிப்பிட்டுள்ளது.
மொத்த வாகனத் தயாரிப்பு சென்ற ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் உயர்ந்து 28.28 லட்சமாக உள்ளது. இதுகுறித்து இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) இயக்குநர் ராஜேஷ் மேனன் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக் காலத்தில் வாகன விற்பனை அதிகரிப்பது வழக்கம். இவ்வாண்டு அக்டோபர் மாதம் தீபாவளியும் தசராவும் வந்ததால், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்முறை வாகன விற்பனை அதிகரித்துள்ளது” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT