Published : 30 Oct 2024 03:29 PM
Last Updated : 30 Oct 2024 03:29 PM

ஃபேன்சி வெடிகள் தட்டுப்பாட்டால் சிவகாசியில் பட்டாசு விலை அதிகரிப்பு - பொதுமக்கள் ஏமாற்றம்

சிவகாசி - சாத்தூர் சாலையில் உள்ள பட்டாசு கடையில் குறைந்த அளவிலான பட்டாசுகளே இருப்பு உள்ளன

சிவகாசி: சிவகாசியில் உற்பத்திக் குறைவால் தட்டுப்பாடு ஏற்பட்டு தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பே பட்டாசுகள் விற்பனை ஆகின. இதில் விலையும் அதிகரித்த நிலையில் விரும்பிய பட்டாசுகள் கிடைக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 1,080-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு தீபாவளி பட்டாசு விற்பனை மும்முரமாக நடைபெற்றதால் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் இருந்த 95 சதவீதத்துக்கும் அதிகமான பட்டாசுகள் விற்றுத் தீர்ந்தன. இதனால், சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் இந்த ஆண்டு தீபாவளிக்கான உற்பத்தி முன்கூட்டியே தொடங்கியது.

அதிகாரிகளின் தொடர் ஆய்வு நெருக்கடி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், சிறு பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம், தொடர்மழை, அடுத்தடுத்த விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பட்டாசு உற்பத்தி 30 சதவீதம் வரை பாதிக்கப்பட்டது.

சிவகாசி - சாத்தூர் சாலையில் உள்ள பட்டாசு கடையில் விற்றுத்
தீர்ந்ததால் காலியாக உள்ள ரேக்குகள்.

இந்த ஆண்டு நவராத்திரி விழாவும், தீபாவளியும் நெருங்கி வந்ததால் வடமாநிலங்களுக்கு அதிக அளவிலான பட்டாசுகள் அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே தற்காலிக பட்டாசு கடைகளுக்கான உரிமம் வழங்கப்பட்டதால் பட்டாசுகள் வெளியூர்களுக்கு முன்னதாகவே விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 2,500-க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனைக் கடைகளில் கடந்த 2 வாரங்களாக பட்டாசு விற்பனை மும்முரமாக நடைபெற்றது. தீபாவளிக்கு இரு நாட்களுக்கு முன்னதாகவே தட்டுப்பாடு காரணமாக பெரும் பாலான கடைகளில் பட்டாசுகள் விற்றுத் தீர்ந்தன. இதனால் கடைசி 2 நாட்களில் பட்டாசுகள் விலை 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. விலை உயர்ந்தபோதும் விரும்பிய பட்டாசுகள் கிடைக்காததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x