Published : 30 Oct 2024 06:04 AM
Last Updated : 30 Oct 2024 06:04 AM
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் பாலகங்களில் சிறப்பு இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், ரூ.120 கோடி மதிப்பிலான ஆவின் பொருட்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் வினீத் தெரிவித்தார்.
தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் உப பொருட்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உட்பட 225 வகையான பால் பொருள்கள் தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக, தயாரித்து, ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், நிகழாண்டில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு, ஆவின் பாலகங்களில் சிறப்பு இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் வினீத் கூறியதாவது:
ஆவின் பாலகங்களில் சிறப்பு இனிப்பு வகைகள், கார வகைகள் உட்பட ஆவின் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தீபாவளி பண்டிகை இனிப்பு வகைகளான நெய் பாதுஷா, நட்ஸ் அல்வா, காஜூ பிஸ்தா ரோல், காஜூ கட்லி, மோதி பாக் ஆகியவையும், கார வகைகளான ஆவின் மிக்சர், பட்டர் முருக்கு ஆகியவையும் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரூ.120 கோடி மதிப்பிலான ஆவின் இனிப்பு வகைகள் உட்பட ஆவின் பொருட்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.101 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு 20 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகளை பல்க் புக்கிங் செய்ய ஊக்கப்படுத்தப்படுகிறது.
கூட்டுறவுச் சங்கங்கள், தனியார், அரசு அலுவலகங்களில் பல்க் புக்கிங் செய்ய ஊக்கப்படுத்தி வருகிறோம். இதுதவிர, ஆவின் உற்பத்தி மையங்களில் இனிப்பு வகைகள் உட்பட ஆவின் பொருட்கள் தரமானதாக இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT