Published : 30 Oct 2024 12:12 AM
Last Updated : 30 Oct 2024 12:12 AM

2024- 2025 நிதியாண்டின் 2-வது காலாண்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு ரூ.303 கோடி லாபம்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுப் பேசினார் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ்.நாயர். உடன், செயல் இயக்குநர் வின்சென்ட் மேனாசெரி, தலைமை நிதி அலுவலர் பி.ஏ.கிருஷ்ணன். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 2024- 2025-ம் நிதியாண்டின் 2-வது காலாண்டில் ரூ.303 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குநர் குழுக் கூட்டம் தூத்துக்குடியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், 2024-2025-ம் நிதியாண்டின் 2-ம் காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான நிதிநிலை அறிக்கை முடிவுகள் இறுதிசெய்யப்பட்டன. வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சலீ எஸ்.நாயர் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:

2024-2025-ம் நிதியாண்டின் 2-ம் காலாண்டில் வங்கி தனது மொத்த வணிகத்தில் 7.97 சதவீதம் வளர்ச்சியடைந்து, ரூ.91,875 கோடியை எட்டியுள்ளது. வைப்புத்தொகை 4.29 சதவீதம் அதிகரித்து, ரூ.49,342 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த கடன்கள் ரூ.42,533 கோடி. இது 12.59 சதவீதம் வளர்ச்சி. வங்கியின் நிகர மதிப்பு ரூ.8,430 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் 2-ம் காலாண்டில் இது ரூ.7,384 கோடியாக இருந்தது. வங்கியின் நிகர லாபம் ரூ.274 கோடியில் இருந்து, ரூ.303 கோடியாக அதிகரித்துள்ளது.

வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ.365 கோடியில் இருந்து ரூ.465 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர வட்டி வருமானம் ரூ.596 கோடியாகும். இது முந்தைய ஆண்டின் 2-வது காலாண்டில் ரூ.533 கோடியாக இருந்தது. வட்டி அல்லாத வருமானம் ரூ.156 கோடியில் இருந்து ரூ.227 கோடியாக உயர்ந்துள்ளது.

மொத்த வராக்கடன் 1.70 சதவீதத்தில் இருந்து 1.37 சதவீதமாகவும், நிகர வராக்கடன் 0.99 சதவீதத்தில் இருந்து 0.46 சதவீதமாகவும் குறைந்துள்ளது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்குகளின் புத்தக மதிப்பு ரூ.466-ல் இருந்து ரூ.532-ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிதியாண்டின் 2-வது காலாண்டில் வங்கியின் கடன் தொகை 91 சதவீதத்தில் இருந்து 92 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2024- 2025-ம் நிதியாண்டு 2-ம் காலாண்டில் 15 புதிய கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில், வங்கி செயல் இயக்குநர் வின்சென்ட் மேனாசெரி, தலைமை நிதி அலுவலர் பி.ஏ.கிருஷ்ணன், பொதுமேலாளர் அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x