Published : 29 Oct 2024 07:37 PM
Last Updated : 29 Oct 2024 07:37 PM
மதுரை: தீபாவளியையொட்டி மதுரை வாடிப்பட்டியில் கூடிய வாரச்சந்தையில் இன்று ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகே தனியார் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் கூடுகிறது. இச்சந்தையில் காய்கறிகள் மட்டுமின்றி ஆடு, மாடு கோழிகளும் விற்கப்படுவது வழக்கம். வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்தும், மதுரை, திண்டுக்கல், தேனி, ஒட்டன்சத்திரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ஆட்டு வியாபாரிகள் இந்தச் சந்தைக்கு ஆடுகளை விற்கவும் வாங்கவும் வருவர்.
இந்நிலையில், தீபாவளிக்காக இன்று கூடிய சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது. ஆயிரக்கணக்கில் ஆடுகள் விற்பனைக்காக குவிந்தன. குறிப்பாக, செம்மறி, மயிலம்பாடி, ஆந்திரா, கர்நாடகா வகை ஆடுகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. சுமார் 10 கிலோ எடை கொண்ட குட்டி ஆடுகள் ரூ.8 ஆயிரத்திற்கும், 15 கிலோ எடையிலான ஆடுகள் ரூ.15 ஆயிரத்திற்கும், 25 கிலோ ஆடுகள் ரூ.20 ஆயிரத்திற்கும் விற்கப்பட்டன.
இது போன்று, அதிகளவில் சேவல், கோழிகளும் விற்பனைக்காக மக்கள் கொண்டு வந்தனர். ஒரு கோழி ரூ.400-க்கும், சேவல் ரூ.600-க்கும், நாட்டுக்கோழி ரூ.800-க்கும் விற்பனையானது. மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து வந்த ஏராளமானோர் இறைச்சிக்காக அதிகளவில் ஆடு, கோழிகளை வாங்கிச் சென்றனர். தீபாவளியையொட்டி இன்று கூடிய வாடிப்பட்டி சந்தையில் சுமார் ரூ. 1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்று தீர்ந்ததாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT