Published : 25 Oct 2024 04:43 PM
Last Updated : 25 Oct 2024 04:43 PM
சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகள் பிரபல ஆன்லைன் வர்த்தக தளங்களிலும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 3 மாதங்களில் ரூ.22 லட்சத்துக்கு பொருட்கள் விற்பனையாகி உள்ளன.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் இயங்கி வரும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கங்களின் கீழ் தமிழகம் முழுவதும் 4.73 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் நகர்ப்புற மக்களை சென்றடையும் வகையில் பல்வேறு முன்னேற்பாடுகளை அரசு செய்து வருகிறது.அந்த வகையில் மாதந்தோறும் இருமுறை வார விடுமுறை நாட்களில் மதி இயற்கை சந்தை, பண்டிகைக் கால சிறப்பு விற்பனை போன்றவை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற பிரபல ஆன்லைன் இ-வர்த்தக தளத்திலும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் கடந்த 3 மாதங்களாக விற்பனையாகி வருகின்றன.முதல்கட்டமாக 1,000 மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் அமேசான், ஃபிளிப்கார்ட், மீசோ, ஜெம், இந்தியா மார்ட், டிரேட் இந்தியா, பூஸ்ட் 360 ஆகிய ஆன்லைன் வர்த்தக தளத்தில் விற்பனைக்காக பதிவேற்றம் செய்யப்பட்டன. இதன் மூலம் 3 மாதங்களில் ரூ.22 லட்சத்துக்கு மகளிர் சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகள் விற்பனையாகி உள்ளன.
அதேபோல மகளிர் சுய உதவிக் குழுக்களின் பாரம்பரிய உணவு வகைகளான சோள தோசை, கம்பு மற்றும் ராகி புட்டு, முருங்கை, ப்ரோக்கோலி சூப்கள், வெண்டைக்காய் வடை, தட்டாம் பயிறு வடை, இனிப்புப் பணியாரம், பால் கொழுக்கட்டை, தினை பாயாசம், பனம் பால், மூலிகை காபி போன்றவையும் ‘ஆகா-ஓகோ ட்ரெடிஷனல் ஃபுட்’ என்ற பெயரில் ஸ்விக்கீ, சொமோட்டோ உள்ளிட்ட ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் வாயிலாகவும் மாவட்ட அளவில் விற்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT