Published : 21 Oct 2024 07:49 PM
Last Updated : 21 Oct 2024 07:49 PM
புதுடெல்லி: “ஆதார் என்பது தற்போது உலகின் மிகவும் முக்கியமான தொழில்நுட்ப அமைப்பாகும். நேரடி பலன் பரிமாற்றம் உட்பட அரசின் சலுகைகளைப் பெற ஆதார் மக்களுக்கு ஓர் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது” என்று நோபல் பரிசு வென்ற பொருளாதார அறிஞர் பால் ரோமர் புகழாரம் சூட்டியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நடத்திய உலக உச்சி மாநாட்டில் பால் ரோமர் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில், "ஆதார் போன்ற அடித்தளத்தை அமெரிக்காவில் அமைக்க முடியாது. காரணம், அந்த தேசம் தனியார் துறையின் ஏகபோகத்தில் இருக்கிறது. தற்போதைய உலகில் ஆதார் என்பது மிகவும் முக்கியமான தொழில்நுட்ப அமைப்பாகும். ஆதார் ஒரு பிரச்சினையை தீர்த்து வைத்தது. இந்த அடித்தளத்தின் மூலம் இப்போது நீங்கள் அனுபவிக்கும் அருமையான அனைத்து சேவைகளையும் உருவாக்கலாம்.
யுபிஐ மற்றும் டிபிடி ஆகியவற்றில் ஆதார் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது குறித்து இந்திய அரசு அச்சப்படவில்லை. இந்திய மக்கள் பார்த்தது என்னவென்றால், அரசால் கட்டுப்படுத்தப்படும் ஆதார் தளத்தை உருவாக்க முடியும். அதனை மக்களின் நலனுக்குப் பயன்படுத்த முடியும். ஆதார் திட்டம் குறித்து பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இருந்தாலும் இந்திய அரசு இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றது. நீதிமன்றமும் அவர்களை கட்டுப்படுத்தவில்லை. அதனால் அரசு இந்தக் குறிப்பிடத்தக்க வெற்றியை சாதித்துள்ளது. மேற்கு நாடுகளில் நீதித் துறையால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
நகர்புற மையங்கள் என்பது ஒட்டுமொத்த உலகின், மொத்த உள்நாட்டு உற்பத்தியை உருவாக்கும் மையங்கள். இந்தியா அங்குள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நகரமயமாக்களில் உள்ள சிக்கல் நிலங்களை கட்டமைப்பது. போதுமான அளவு நிலங்களை உங்களால் உருவாக்க முடிந்தால், மிகக் குறைந்த மதிப்புடைய அந்த நிலத்தை எடுத்து அங்கு நவீன நகரத்தை உருவாக்கி அதனை மதிப்பு மிக்க நிலமாக மாற்றலாம்.
சீனாவும் ரஷ்யாவும் மீண்டும் பேரரசுகளின் உலகிற்குள் நுழைய விரும்புகின்றன. அவர்கள் பேரரசுகள் தலையீடும் திறன்கள் கொண்டவை என்று நினைக்கின்றன. அவர்களின் செல்வாக்கு தேச எல்லைகளைக் கடந்து முழு மண்டலத்துக்கும் செல்வாக்குச் செலுத்துவது என்பது உங்களுக்கு தெரியும்.
இந்தியா பேரரசுகளின் பக்கம் நிற்க போகிறதா அல்லது உலகில் முன்னோக்கி செல்லும் அமைப்பு கொள்கையாக இறையாண்மை அரசின் முக்கியத்துவத்துக்காக நிற்கப்போகிறதா என்பதை இப்போது தீர்மானிக்க வேண்டும். பேரரசுகளை நாங்கள் விரும்பவில்லை என்று இந்தியா சொல்லவேண்டும். இந்தியாவின் நிலைப்பாடு ஒரு சமநிலையை உருவாக்கும்" என்று பால் ரோமர் பேசினார்.
அமெரிக்க பொருளாதார நிபுணரான பால் ரோமர் பாஸ்டன் கல்லூரியில் பொருளியியல் போராசிரியராக பணியாற்றுகிறார். கடந்த 2018-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்ற இவர், உலக வங்கியின் தலைமைப் பெருளாகதார நிபுணராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT