Published : 21 Oct 2024 07:05 PM
Last Updated : 21 Oct 2024 07:05 PM
சென்னை: நாடு முழுவதும் வங்கிகளில் காலியாக உள்ள சுமார் ஒரு லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இல்லையெனில் நாடு தழுவிய அளவில் வங்கியில் வேலைநிறுத்தம் மற்றும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அந்தச் சங்கம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில ஆண்டுகளாக வங்கிகளில் தேவையான அளவுக்கு ஊழியர்கள் பணியமர்த்தப்படவில்லை. வங்கிகளில் உதவியாளர்ளை பணி அமர்த்துவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் சுமார் 1 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. அந்தப் பணியிடங்களுக்கு நிரந்தர ஊழியர்களை நியமிக்காமல் தற்காலிமாக, ஒப்பந்த அளவில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த போக்கை அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இதை வலியுறுத்தும் விதமாக போராட்டம், வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படும்.
வாராக்கடன் அதிகரிப்பு: கடந்த சில ஆண்டுகளாக வங்கிகளில் வாராக்கடன் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் கடனை திரும்ப செலுத்தாமல் உள்ளது தனியார் பெரு நிறுவனங்கள்தானே தவிர தனிநபர்கள் அல்ல. அந்த வகையில் அரசு கடனை செலுத்தாமல் உள்ள பட்டியலை அரசு வெளியிட வேண்டும். அரசு அதை செய்யாமல் கடன் தள்ளுபடி போன்ற சலுகையை வழங்குகிறது. இதனால் வங்கிகளுக்கு தான் நஷ்டம். அதனை நாங்கள் கண்டிக்கிறோம்” என கூறியுள்ளார்.
கடந்த 2001 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் ரூ.14,56,805 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டம், வேலைநிறுத்தத்தால் வாடிக்கையாளர்கள் சேவை பாதிக்கப்படும் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT