Published : 21 Oct 2024 12:28 AM
Last Updated : 21 Oct 2024 12:28 AM

சிவகாசியில் பட்டாசு வாங்க குவியும் வெளிமாவட்ட மக்கள்: விற்பனையாளர்கள் மகிழ்ச்சி

சிவகாசி: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதிலும் இருந்து பட்டாசு வாங்குவதற்காக சிவகாசிக்கு மக்கள் வருவதால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் தீபாவளி பண்டிகைக்காக ஆண்டு முழுவதும் பட்டாசு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டாசு உற்பத்தி நடந்தாலும், சிவகாசி பட்டாசுக்கு இந்தியா முழுவதும் தனி மதிப்பு உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சிவகாசியில் நிரந்தர உரிமம் பெற்ற 2,500-க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனை கடைகள் உள்ளது.

விதிமுறைகள், கட்டுப்பாடுகள் காரணமாக பட்டாசுகளை ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து கட்டணம் அதிகம் என்பதால் நாட்டின் பிற பகுதிகளில் விற்பனைக்கு வரும் போது பட்டாசு விலை அதிகரிக்கிறது. உற்பத்தி செய்த இடத்திலேயே விற்பனை செய்யப்படுவதால் சிவகாசியில் உள்ள பட்டாசு விற்பனை கடைகளில் 50 முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவு மட்டுமின்றி பட்டாசுகளை வெடி பார்த்து வாங்கலாம் என்பதால் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடக, ஆந்திர மாநில மக்களும் சிவகாசிக்கு நேரடியாக வந்து பட்டாசு வாங்குவதை விரும்புகின்றனர்.

தீபாவளிக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் பட்டாசு வாங்குவதற்காக வெளியூர் மக்கள் சிவகாசிக்கு அதிகளவில் வந்துள்ளதால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பட்டாசு மொத்த விற்பனையாளர் ராஜேஷ் கூறுகையில்: ஆடிப்பெருக்கு அன்று தீபாவளி பட்டாசு விற்பனை சிறப்பு விற்பனை தொடங்கியது. தொடக்கத்தில் ஆர்டர்கள் குறைவாக வந்தாலும், ஆயுத பூஜையின் போது விற்பனை சூடுபிடித்தது. துர்கா பூஜையும், தீபாவாளியும் நெருங்கி வந்ததால் வடமாநிலங்களுக்கு தேவையான பட்டாசுகள் முன்கூட்டியே அனுப்பப்பட்டு விட்டது. இந்த 10 நாட்களும் உள்ளூர் வியாபாரத்தை மையப்படுத்தியே உள்ளது. வெளிமாவட்ட மக்கள் வருகையால் பட்டாசு விற்பனை தீவிரமடைந்துள்ளது. இதனால் இப்போதே குறிப்பிட்ட சில பேன்சி ரக பட்டாசுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடுத்த சனி, ஞாயிறு நாட்களில் விற்பனை தீவிரமடையும், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x