Last Updated : 17 Oct, 2024 05:01 PM

 

Published : 17 Oct 2024 05:01 PM
Last Updated : 17 Oct 2024 05:01 PM

தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி 50% குறைந்தது - லாபம் எப்படி?

தூத்துக்குடி பகுதியில் நேற்று முன்தினம் மாலை பெய்த மழையால் உப்பளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. | படம்: என்.ராஜேஷ் |

தூத்துக்குடி: வடகிழக்கு பருவமழை தொடங்கிவுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி காலம் முடிவுக்கு வந்துள்ளது. நடப்பாண்டில் தாமதமான தொடக்கம் மற்றும் மழை குறுக்கீடு காரணமாக உப்பு உற்பத்தி 50 சதவீதம் அளவுக்கே நடந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவற்றில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி உள்ளது.

இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் உப்பு உற்பத்திக்கு உகந்த காலம் ஆகும். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் முடிவடையும்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த அதி கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் உப்பளங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு உப்பளங்களை சீரமைத்து உப்பு உற்பத்தியை தொடங்க சுமார் 3 மாதங்களுக்கு மேல் தாமதம் ஏற்பட்டது. மேலும், அவ்வப்போது பெய்த மழையாலும் உப்பு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது.

முடிவுக்கு வந்தது: தூத்துக்குடி பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் பெய்த கனமழை காரணமாக உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி சீஸன் முடிவுக்கு வந்துள்ளது.

இது குறித்து தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க முன்னாள் செயலாளர் ஏ.ஆர்.ஏ.எஸ்.தனபாலன் 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் 90 சதவீத உப்பளங்களில் உப்பு உற்பத்திமுடிவுக்கு வந்துவிட்டது. 10 சதவீத உப்பளங்களில் மட்டும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணிகளும் ஓரிரு நாட்களில் நிறுத்தப்பட்டு விடும்.

50 சதவீதம் குறைவு: மாவட்டத்தில் இந்த ஆண்டு உப்பு உற்பத்திதாமதாமாகவே தொடங்கியது. மேலும் இடையிடையே மழையும் குறுக்கிட்டது. கடந்த 2 மாதங்கள் மட்டுமே சாதகமான சூழ்நிலை இருந்தது. இதனால் 45 முதல் 50 சதவீத அளவுக்கு, அதாவது 12 லட்சம் டன் உப்பு தான் உற்பத்தியாகியுள்ளது. இதில் 4 லட்சம் டன் உப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 8 லட்சம் டன் அளவுக்கு கையிருப்பில் உள்ளது. இது அடுத்த மூன்று மாதங்களுக்கு போதுமானதாக இருக்கும்.

விலையை பொறுத்தவரை தற்போது ஒரு டன் உப்பு ரூ.2,500 முதல் ரூ.3,600 வரை விலை போகிறது. வரும் நாட்களில் தேவையை பொறுத்தே விலை உயர வாய்ப்பு உள்ளது. உப்பு விலை ஓரளவுக்கு இருந்தாலும், இந்த ஆண்டு செலவு அதிகம் மற்றும் உற்பத்தி குறைவு காரணமாக உற்பத்தியாளர்களுக்கு பெரிதாக லாபம் இல்லை என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x