Published : 16 Oct 2024 06:46 PM
Last Updated : 16 Oct 2024 06:46 PM

ராபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: ராபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 2025-26 சந்தைப் பருவத்தில் ராபி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்வதற்காக, 2025-26 சந்தைப் பருவத்திற்கான ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கடுகு குவிண்டாலுக்கு ரூ.300-ம், மசூர் பருப்பு குவிண்டாலுக்கு ரூ.275-ம் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது. பருப்பு, கோதுமை, குங்குமப்பூ, பார்லி ஆகியவற்றின் விலை குவிண்டாலுக்கு முறையே ரூ.210, ரூ.150, ரூ.140, ரூ.130 உயர்த்தப்பட்டுள்ளது.

கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ. 2425 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே ரூ. 2275 ஆக இருந்தது. மனித உழைப்பு, மாட்டு உழைப்பு, இயந்திர உழைப்பு, குத்தகை வாடகை, விதைகள், உரங்கள், நீர்ப்பாசன செலவுகள், கருவிகள், பண்ணை கட்டிடங்கள் மீதான தேய்மானம், நடைமுறை மூலதனத்தின் மீதான வட்டி, பம்ப் செட்டுகளை இயக்குவதற்கான டீசல் மின்சாரம் போன்ற அனைத்து செலவுகளையும் கருத்தில் கொண்டு இந்த குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2025-26 சந்தைப் பருவத்துக்கான கட்டாய ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையின் அதிகரிப்பு, உற்பத்தி செலவை விட குறைந்தபட்சம் 1.5 மடங்கு அளவில் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கும் மத்திய பட்ஜெட் 2018-19 அறிவிப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது. ராபி பயிர்களுக்கான இந்த அதிகரித்த குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதுடன், பயிர் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x