Published : 10 Oct 2024 05:19 PM
Last Updated : 10 Oct 2024 05:19 PM
புதுடெல்லி: வரி வருவாயில் இருந்து மாநில அரசுகளுக்கான வரிப் பகிர்வாக ரூ.1,78,173 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசு, மாநிலங்களுக்கான வரிப் பகிர்வாக ரூ.1,78,173 கோடியை இன்று விடுவித்துள்ளது. ரூ. 89,086.50 கோடி என்னும் வழக்கமான மாதாந்திர வரிப் பகிர்வுக்குப் பதிலாக, கூடுதல் வரிப்பகிர்வு வழங்கப்பட்டுள்ளது. இதில், 2024 அக்டோபர் மாதத்தில் விடுவிக்கப்பட வேண்டிய வழக்கமான முன்கூட்டிய தவணையும் அடங்கியுள்ளது.
வரவிருக்கும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டும், மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்தவும், அவற்றின் வளர்ச்சி / நலத்திட்டங்களின் செலவினங்களுக்கு நிதியளிக்கவும் ஏற்றவகையில் 2024 அக்டோபர் மாதத்திற்கான வரிப்பகிர்வு விடுவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்துக்கு ரூ.7,211 கோடி, அருணாச்சலப் பிரதேசத்துக்கு ரூ.3,131 கோடி, அசாமுக்கு ரூ. 5,573 கோடி, பிகாருக்கு ரூ.17,921 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சத்தீஸ்கருக்கு ரூ.6,070 கோடி, குஜராத்துக்கு ரூ.6,197 கோடி, ஹரியானாவுக்கு ரூ.1,947 கோடி, இமாச்சலப் பிரதேசத்துக்கு ரூ.1,479 கோடி, ஜார்க்கண்ட்டுக்கு ரூ.5,892 ஒதுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவுக்கு ரூ. 6,498 கோடி, கேரளாவுக்கு ரூ.3,430 கோடி, மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.13,987 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.11,255 கோடி, ஒடிசாவுக்கு ரூ.8,068 கோடி, பஞ்சாப்-க்கு ரூ.3,220 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ. 10,737 கோடி, தமிழ்நாட்டுக்கு ரூ.7,268 கோடி, தெலங்கானாவுக்கு ரூ.3,745 கோடி, உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.31,962 கோடி, உத்தராகண்ட்டுக்கு ரூ.1,992 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.13,404 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT