Published : 10 Oct 2024 01:04 PM
Last Updated : 10 Oct 2024 01:04 PM
சென்னை: ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் பாலகங்களில் சிறப்பு இனிப்பு, கார வகைகள் விற்பனை தொடங்கியுள்ளதாக ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஆவின் வாயிலாக, தினசரி 34 லட்சம் லிட்டருக்கும் மேலாக பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இப்பாலை பதப்படுத்தி, பலவகைகளில் பிரித்து விற்பனை செய்யப்படுகிறது.
இதுதவிர, பாலின் உப பொருள்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உள்பட 225 வகையான பால் பொருள்களை தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக, தயாரித்து, ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
இதற்கிடையில், நிகழாண்டில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் சிறப்பு இனிப்பு வகைகள், கார வகைகள் விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டது. இதன்படி, ஆவின் ஒன்றியங்களில் பால் பொருள்கள், இனிப்பு வகைகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் பாலகங்களில் சிறப்பு இனிப்பு, கார வகைகள் விற்பனை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: "ஆவின் நிறுவனம் சார்பில் வெண்ணெய், நெய், பால்கோவா, மைசூர் பாகு, லஸ்சி, மோர், சாக்லெட், தயிர் மற்றும் ஜஸ் கிரீம் போன்ற பால் பொருள்களை தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர, பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு இனிப்பு வகைகள், கார வகைகளை தயாரித்து விற்பனை செய்யும் பணியும் தொடங்கியுள்ளது.
சிறப்பு இனிப்பு வகைகளைப் பொறுத்தவரை நெய் பாதுஷா (250 கிராம்), நட்ஸ் அல்வா (250 கிராம்), காஜூ பிஸ்தா ரோல் (250 கிராம்), காஜூ கட்லி (250 கிராம்), மோதி பாக் (250 கிராம்) உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, ஆவின் மிக்சர், பட்டர் முருக்கு ஆகியவையும் ஆவின் பாலகங்களுக்கு வந்துள்ளன. பண்டிகை காலத்தில் வெண்ணெய், நெய் ஆகியவை எவ்வித தட்டுப்பாடும் இல்லாமல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹைடெக் ஆவின் பாலகங்களில் ஒரு கிலோ நெய் வாங்கினால் ரூ.10 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஆவின் இனிப்பு, கார வகைகளைப் பொறுத்தவரை ‘பல்க்’ புக்கிங் செய்தால், குறிப்பிட்ட சதவீதத்தில் தள்ளுபடி வழங்கப்படும். தீபாவளி பண்டிகை வரை இத்தள்ளுபடி அளிக்கப்படும்.பண்டிகை காலத்தில் ஆவின் பால் பொருள்களுடன் இனிப்பு வகைகள், கார வகைகள் ஆகியவற்றின் விற்பனையை இந்த ஆண்டு 20 சதவீதம் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ” என்று அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT