Published : 09 Oct 2024 10:23 AM
Last Updated : 09 Oct 2024 10:23 AM
மும்பை: ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பகிர்ந்து கொண்ட அவர், ரெப்போ விகிதம் 6.5% ஆகவே தொடரும் எனத் தெரிவித்தார்.
இதன்மூலம் 2023 பிப்ரவரி முதல் தொடர்ந்து 10-வது முறையாக ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். இரு மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி, ரெப்போ விகிதம் தொடர்பாக முடிவுகள் எடுப்பது வழக்கம். அந்த வகையில் ஆர்பிஐ நிதி கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று (அக்.9) வெளியிட்டார்.
பொதுவாக ரெப்போ விகிதம் உயரும்போது வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். ஆனால் தொடர்ந்து 10-வது முறையாக ரெப்போ வட்டி மாற்றப்படாததால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறையவும் செய்யாது. இவ்வாறாக நீண்ட காலமாக வீடு, வாகனங்களுக்கான வட்டி குறையாமல் இருப்பதும் ஒருவகையில் சாமானிய மக்களுக்கு சுமைதான் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
“நுகர்வோர் விலைக் குறையீடு நடப்பு நிதியாண்டில் சராசரியாக 4.5%-க்கும் மேல் இருக்கும். இது ஒரு மிதமான அளவு என்றாலும் பணவீக்கத்தை மேலும் கட்டுப்படுத்தும் முயற்சிகளையும் கவனமாக, லாவகமாகவே மேற்கொள்ள வேண்டியுள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பருவகால பிரச்சினைகள், உலகளாவிய புவி அரசியல் சிக்கல்கள் ஆகியன பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து சவால் விடுக்கின்றன.” என்று சக்திகாந்த தாஸ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT