Published : 03 Oct 2024 08:01 PM
Last Updated : 03 Oct 2024 08:01 PM
சென்னை: “தமிழகத்தில் பதிவுத் துறை வருவாய் கடந்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்தாண்டு ரூ.1,121 கோடி அதிகரித்துள்ளது” என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரித்துறை கூட்ட அரங்கில், அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், செப்டம்பர் மாதத்துக்கான பதிவுத்துறை ஆய்வுக்கூட்டம் இன்று (அக்.3) நடைபெற்றது. கூட்டத்தில், துணை பதிவுத் துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்கள் கடந்த மாதங்களில் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலர்களில் மேற்கொண்ட திடீர் ஆய்வில் கண்டறியப்பட்ட விவரங்களை விவரித்தனர்.
அதில், பதிவு செய்த ஆவணங்களை அதே நாளிலேயே திருப்பி ஒப்படைத்தல், ஆவணங்களை பதிவு செய்தவுடன் தன்னிச்சையாக இணையவழி பட்டா மாற்றம் செய்வதை தேர்வு செய்தல், வில்லங்கச் சான்று மற்றும் சான்றிடப்பட்ட நகல்கள் இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக அவர்களின் உள்நுழைவுக்கே இணையதளம் வழி அனுப்பிவைத்தல், நிலுவை ஆவணங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்த விவரங்கள், தணிக்கை பிரிவு அலுவலர்களின் பணிகள், முக்கிய பதிவேடுகளை பராமரித்து கண்காணித்தல், வருவாய் மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட கருத்துருக்கள் உள்ளிட்ட விவரங்களை அமைச்சர் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அமைச்சர் பி.மூர்த்தி பேசும்போது, “பதிவு செய்த ஆவணங்களை அன்றே திருப்பி அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் அதிகாரிகளால் விவாதிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் கருத்துக்களை சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்களிடம் எடுத்துக் கூறி அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். பதிவுத் துறையில் கடந்த 2023-24-ம் நிதியாண்டின் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த நிதி ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் ரூ.1,121 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது,” என்றார். இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் பிரஜேந்திர நவ்நீத், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT