Published : 20 Sep 2024 04:35 AM
Last Updated : 20 Sep 2024 04:35 AM

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி விற்பனை தொடக்கம்: ரூ.100 கோடிக்கு விற்க இலக்கு நிர்ணயம்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,சென்னை எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டுமாளிகை உட்பட பல்வேறு விற்பனை நிலையங்களில் பட்டு, பருத்தி புடவை உள்ளிட்ட பல்வேறு ஆடைகள் விற்பனை தொடங்கி உள்ளது. ரூ.100 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசின் கைத்தறி, துணிநூல் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோ-ஆப்டெக்ஸ், இந்திய அளவில் முன்னணி கைத்தறி நிறுவனமாக செயல்படுகிறது. தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து, நாடு முழுவதும் உள்ள 150 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த விற்பனை நிலையங்களில் காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டு புடவைகள், கோவை கோரா பருத்தி சேலைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்திசேலைகள், லினன் புடவைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள் உட்பட பல்வேறு ரகங்கள் விற்பனைக்கு இடம்பெற்றுள்ளன.

கோ-ஆப்டெக்ஸ் தலைமையகம் சென்னை எழும்பூரில் இருக்கிறது. இங்கு கோ-ஆப்டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டுமாளிகை செயல்படுகிறது. இங்கும் பட்டுப் புடவைகள், பருத்தி சேலைகள் உள்பட பலவிதமான ஆடைகள் விற்பனை நடைபெறுகிறது.

பல்வேறு புதிய ரகங்கள்: இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் புதிய ஆடைகள் விற்பனை தொடங்கியுள்ளது.

இது குறித்து கோ-ஆப்டெக்ஸ் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலியில் நெய்யப்பட்ட "செடிபுட்டா" பருத்தி புடவை, சின்னாளப்பட்டி பருத்தி புடவை, குன்னத்தூர் லுங்கி, உட்பட பல்வேறு புதிய ரகங்கள் விற்பனையில் இடம்பெற்றுள்ளன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.100 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களின் வளாகங்களிலும், இணையதளம் வாயிலாகவும், விற்பனை நிலையங்கள் வாயிலாகவும் விற்பனை செய்யப்பட உள்ளது. இதுதவிர, அரசு, தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கடன் அட்டைக்கு விற்பனை செய்யப்படும். பண்டிகை காலத்தை முன்னிட்டு, 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். பண்டிகை கால விற்பனையை ஜனவரி 31-ம்தேதி வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கைத்தறி துறை செயலர் ஆய்வு: இதற்கிடையில், சென்னை தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகையில் புதிய ரக ஆடைகளை தமிழக கைத்தறி துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பட்டு மற்றும் பருத்தி ஆடைகள் அளவு, வண்ணம், வடிவமைப்பு தொடர்பாக சில ஆலோசனைகளை வழங்கினார். அவருடன் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x