Published : 15 Sep 2024 11:15 AM
Last Updated : 15 Sep 2024 11:15 AM
சென்னை: கடந்த 1999ம் ஆண்டு ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலை ரூ.1,700 கோடி முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2009ம் ஆண்டு, ஃபோர்டு இந்தியா தொழிற்சாலையை ரூ.1,500 கோடி கூடுதல் முதலீட்டில் விரிவாக்கம் செய்யவும், புதிதாக இன்ஜின் தயாரிப்புத் தொழிற்சாலை நிறுவவும், கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் மூலம் அத்தொழிற்சாலையின் உற்பத்தித்திறன் இரு மடங்காக உயர்ந்ததுடன், ஆண்டுக்கு 2.50 லட்சம் கார் இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டன. இந்நிலையில் பல்வேறு காரணங்களுக்காக கடந்த 2021ம் ஆண்டு இந்தியாவில் தனது உற்பத்தியை நிறுத்திய ஃபோர்டு நிறுவனம், 2022ம் ஆண்டு வெளியேறியது. குஜராத்தில் உள்ள உற்பத்தி மையத்தை டாடா நிறுவனத்துக்கு மாற்றியது. ஆனால், தமிழகத்தில் உள்ள ஆலையை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட்டு, தன்வசமே வைத்திருந்தது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவின் சிகாகோவில், செப்.10-ம் தேதி ஃபோர்டு நிறுவனத்தின் ஐஎம்ஜி தலைவர் கே ஹார்ட், துணைத் தலைவர் மேத்யூ கோட்லெவ்ஸ்கி, ஃபோர்டு இந்தியா இயக்குநர் ஸ்ரீபாத் பட் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும், உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுப்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டார். இ்ந்நிலையில், ஃபோர்டு நிறுவனம் தனது உற்பத்தி பிரிவை மீண்டும் தொடங்குவதற்கான விருப்ப கடிதத்தை தமிழக அரசிடம் அளித்துள்ளது.
இதுகுறித்து ஃபோர்டு நிறுவனத்தின் ஐஎம்ஜி தலைவர் கே ஹார்ட் தனது சமூகவலைதளப்பக்கத்தில், ‘‘தமிழக அரசின் தொடர் ஒத்துழைப்பை பாராட்டும் நேரத்தில்,சென்னை தொழிற்சாலையில் பல்வேறு விதமான தொழிற்பிரிவுகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் சென்னையில் எங்களது பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த உள்ளோம். எங்களது உலகளாவிய ஃபோர்டு வர்த்தக குழுவில் ஏற்கெனவே 12 ஆயிரம் பேர் பணியில் உள்ள நிலையில், மேலும், 2500 முதல் 3000 பேரை வரை அடுத்த சில ஆண்டுகளில் சேர்க்க தி்ட்டமிட்டுள்ளோம்’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT