Published : 09 Sep 2024 06:19 AM
Last Updated : 09 Sep 2024 06:19 AM
புதுடெல்லி: வங்கதேசத்தில் கடந்த ஜூலை மாதம் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் வன்முறை ஏற்பட்டதையடுத்து, அந்நாட்டுக்கான பயணிகள் மற்றும் சரக்கு ரயில் சேவை ஜூலை 19-ம் தேதி நிறுத்தப்பட்டது. இதனால் ரயில்வழி வர்த்தகம் தடைபட்டது. ஏற்கெனவே அரிசி, கோதுமை, சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததால் ஆகஸ்ட் 5-ம் தேதி அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகினார். பின்னர் அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. அதன் பிறகும் இந்தியர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான வீடு, கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், அங்கு இப்போது அமைதி திரும்பி வருகிறது. இதையடுத்து இந்தியாவிலிருந்து வங்கதேசத்துக்கு 47 நாட்களுக்குப் பிறகு ரயில் சேவை தொடங்கி உள்ளது. கடந்த 2 வாரங்களாக பிளை ஆஷ், ஜிப்சம், இயற்கை எரிவாயு உட்பட 40 ஆயிரம் டன் சரக்கு ரயில் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 3 ரயில் நிலையங்களில் இருந்து 16 சரக்குபெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பயணிகள் மற்றும் சரக்கு ரயில் சேவையை மீண்டும் தொடங்குமாறு இந்திய ரயில்வே நிர்வாகத்துக்கு வங்கதேச ரயில்வே நிர்வாத்தினர் கடந்த ஆகஸ்ட் 12-ம்தேதி கடிதம் எழுதி உள்ளனர். இதன் அடிப்படையில், இரு நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரயில்வழி வர்த்தகம் மீண்டும் தொடங்கி உள்ளது.
இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் வங்கதேசம் முன்னிலை வகிக்கிறது. கடந்த 2021-ம் ஆண்டு ரூ.1.17 லட்சம் கோடி மதிப்பிலான சரக்குகளை வங்கதேசத்துக்கு இந்தியா ஏற்றுமதி செய்தது. எனினும், 2022-ல் இது ரூ.1.15 லட்சம் கோடியாகவும் 2023-ல் ரூ.94ஆயிரம் கோடியாகவும் குறைந்தது.வங்கதேசத்துக்கான ஏற்றுமதி கடந்த 2 ஆண்டுகளாக குறைந்துவந்த நிலையில், அங்கு அரசியல் ஸ்திரமற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT