Published : 19 Aug 2024 04:43 AM
Last Updated : 19 Aug 2024 04:43 AM
சென்னை: உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வரும் சுற்றுலாத்தலங்களில் அவர்கள் தங்குவதற்கு புதிய ஹோட்டல்கள் அமைப்பது தொடர்பாக ஹோட்டல் நிர்வாகிகள் மற்றும் சுற்றுலா தொழில் முனைவோருடன் சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் முன்னணி ஹோட்டல் நிர்வாகிகள், சுற்றுலாத் தொழில் முனைவோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், சுற்றுலாத் துறை முதன்மைச் செயலர் பி.சந்தரமோகன் தலைமையில் சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில் நடந்தது. இக்கூட்டத்தில், சுற்றுலாத்துறை ஆணையரும், சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநருமான சி.சமயமூர்த்தி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில், தமிழ்நாடு சுற்றுலா கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு சுற்றுலா பிரிவுகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை, புதிய ஹோட்டல்கள் கட்டுவதற்கு அதிக தேவையும், முக்கியத்துவமும் வாய்ந்த பகுதிகள் மற்றும் இடங்களை தேர்வு செய்வது குறித்துவிரிவாக விவாதிக்கப்பட்டது.
மதுரை - ராமேசுவரம் வழித்தடத்தில் மிக அதிக அளவில்ஆன்மிகச் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால், ராமேசுவரத்தில் உலகத்தரத்தில் கூடுதல் தங்கும் விடுதிகளை கட்டுவதற்கும், அழகிய கடற்கரைகளில் கடலின் அழகை ரசிப்பதற்கு ஏதுவாகவும், நீர் சாகச விளையாட்டுகளை ஏற்படுத்த ஏதுவாகவும் இடங்களை தேர்வு செய்வது தொடர்பாகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
மேலும், ராமநாதபுரம் முதல் ராமேசுவரம் வரை உள்ள இடங்களில் சுற்றுலா தங்கும் விடுதிகளை புதிதாக கட்டுவதற்கான இடங்களை தேர்வு செய்யலாம் என்றும், அதிகம் பிரபலமடையாத சுற்றுலாத் தலங்களான ஜவ்வாது மலை, வத்தல் மலை, பச்சைமலை, திருமூர்த்தி மலை ஆகியஇடங்களில் சுற்றுலாப் பயணிகள் தங்குதற்கு வசதிகள் ஏற்படுத்த ஏற்ற இடங்களை தேர்வு செய்யலாம் என்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கோயில் நகரங்களான தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய இடங்களில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதால் அவர்கள் தங்குவதற்காக ஹோட்டல்கள் தொடங்கலாம்.
புதிதாக அமையவுள்ள விமான நிலையம் அருகிலும், கல்பாக்கத்திலிருந்து மரக்காணம் வரையிலும், புதிதாக சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக நட்சத்திர அந்தஸ்திலான ஹோட்டல்கள் கட்டலாம் எனவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. புதிய ஹோட்டல்கள் அமைக்க நிலம் தேவைப்படும் இடங்களை தேர்வு செய்ய ஏதுவாக தேவைப்படும் நிலத்தின் அளவு மற்றும் இடத்தை தெரிவிக்குமாறு சுற்றுலாத்துறைஉயர் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT