Published : 17 Aug 2024 05:53 PM
Last Updated : 17 Aug 2024 05:53 PM
நெல்லூர்: உள்நாட்டில் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ள பொருட்களின் இறக்குமதியைக் குறைத்து, உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று தொழில், வர்த்தகத் துறையினரை, குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திர மாநிலம் வெங்கடாசலத்தில் உள்ள ஸ்வர்ண பாரத் அறக்கட்டளையில் நடைபெற்ற 23-வது ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜக்தீப் தன்கர், "சுதேசியின் ஒரு அம்சமாக பொருளாதார தேசியவாதம் திகழ வேண்டும். அந்நியச் செலாவணி வெளியேற்றம், இந்திய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் இழப்பு உள்ளிட்டவை, தேவையற்ற இறக்குமதிகளால் ஏற்படும் எதிர்மறைத் தாக்கங்கள்.
தவிர்க்க வாய்ப்புள்ள இறக்குமதிப் பொருட்களின் இறக்குமதியைக் குறைத்து அவற்றின் உள்ளூர் உற்பத்திக்கு தொழில் வர்த்தகத் துறையினர் முன்னுரிமை அளிக்க வேண்டும். உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண தொழில்துறையினர் முன்வர வேண்டும். இது இந்திய தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதோடு தொழில்முனைவோரை ஊக்குவிக்கும்.
இயற்கை வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். நிதி அதிகாரத்தை விட தேவையின் அடிப்படையில் வளங்களைப் பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும். பொறுப்பற்ற செலவினங்கள் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வை பாதிக்கும். பணத்தை தேவையில்லாமல் செலவு செய்தால், எதிர்கால சந்ததியினருக்கு அது சிக்கலை ஏற்படுத்தும்.
அரசியல், சுய மற்றும் பொருளாதார நலன்களை விட நாட்டின் நலனுக்கு நாம் அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண்டும். அனைவரது மனநிலையிலும் இந்த மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன். தேச ஒற்றுமை மிகவும் முக்கியம். நல்ல மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான உறுதியான நடவடிக்கைகளும் அவசரத் தேவையானவை. முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு மீது எனக்கு ஆழ்ந்த மரியாதை உள்ளது. தேசத்தின் நலனுக்காக வெங்கையா நாயுடு அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். அவர் தொடங்கிய இந்த அறக்கட்டளை பல நல்ல பணிகளைச் செய்து வருகிறது" என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு, ஆந்திரப் பிரதேச ஆளுநர் அப்துல் நசிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த நிகழ்ச்சியில், ‘Venkaiah Naidu—A Statesman’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT