Published : 13 Aug 2024 03:49 AM
Last Updated : 13 Aug 2024 03:49 AM

ஹிண்டன்பர்க் அறிக்கை பிசுபிசுத்தது; இந்திய பங்குச் சந்தையில் பெரிய பாதிப்பு இல்லை: நம்பிக்கையை இழக்காத முதலீட்டாளர்கள்

புதுடெல்லி: ஹிண்டன்பர்க் அறிக்கையால் இந்திய பங்குச் சந்தை பெரும் சரிவை சந்திக்கலாம் என கருதப்பட்ட நிலையில், பெரிய அளவில் பாதிப்பின்றி வர்த்தகம் நிறைவு பெற்றது.

அமெரிக்காவை சேர்ந்த ஷார்ட் செல்லிங் (Short Selling) நிறுவனம் என்ற பெயரை பெற்றுள்ளது ஹிண்டன்பர்க் நிறுவனம். உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்களை குறிவைத்து இந்த நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. முன்னணி நிறுவனங்கள் நிதி முறைகேடுகள் செய்வதாக கூறி ஆய்வு மேற்கொண்டு இந்த நிறுவனம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஜனவரியில் ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான அதானி குழுமத்தைகுறிவைத்தது. அதானி குழுமம்பங்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இதனால் அப்போது, அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சிஅடைந்து மிகப்பெரிய சரிவை சந்தித்தது. அதேபோல, இந்திய பங்குச் சந்தையும் கடும் வீழ்ச்சியடைந்தது.

இந்த நிலையில், அதானி குழுமத்தை குறிவைத்து ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த 10-ம் தேதி மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேபோல, ‘செபி’அமைப்பையும் குறிவைத்து ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானது.

இதனால் இந்திய பங்குச் சந்தைநேற்று கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என கருதப்பட்டது.

இந்த சூழலில், இந்திய பங்குச் சந்தை நேற்று காலை சரிவுடன் தொடங்கியது. ஹிண்டன்பர்க் அறிக்கையின் தாக்கத்தால் சற்று சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை காலை 10 மணி முதல் ஏற்றம் பெற தொடங்கியது.

மேலும், வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் சிறிது நேரம் 80 ஆயிரம் புள்ளிகளை தொட்டது. இதன்மூலம் இந்திய பங்குச்சந்தை மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழக்காமல் முதலீடு செய்திருப்பது தெளிவாகி உள்ளது. நாளின் இறுதியில் சென்செக்ஸ் 57 புள்ளிகளை இழந்து 79,648 புள்ளிகளுடன் உள்ளது. அதே நேரம், நிப்டி 20 புள்ளிகளை இழந்து 24,347 புள்ளிகளுடன் உள்ளது.

இதுகுறித்து பங்குச் சந்தை நிபுணர்கள் கூறும்போது, “இந்திய பங்குச் சந்தையில் பெரிய அளவில் பாதிப்புஏற்படவில்லை. இதன்மூலம், செபி தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கைகளை இந்திய பங்குச் சந்தை புறம் தள்ளியது என்றே சொல்லலாம். உலக சந்தையில் இருந்து நேர்மறையான குறிப்புகளை பங்குச் சந்தை எடுத்துக் கொண்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

ஹிண்டன்பர்க் அறிக்கையால் இந்திய பங்குச் சந்தை பெரும் சரிவை சந்திக்கலாம் என கருதகப்பட்ட நிலையில் வர்த்தக தொடக்கத்தில் சரிவில் இருந்த பங்குச் சந்தை அதிரடியாக மீண்டும் ஏற்றம் பெற்றது. பின்னர் வர்த்தக இறுதியில் சற்று இறக்கத்துடன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x