Published : 05 Aug 2024 04:49 PM
Last Updated : 05 Aug 2024 04:49 PM

சென்செக்ஸ் 2,000+ புள்ளிகள் சரிவு - இமாலய வீழ்ச்சிக்கு காரணம் என்ன? | HTT Explainer

மும்பை: இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை திங்கள்கிழமை எதிர்கொண்டது. இன்று (ஆக.5) காலை பங்குச்சந்தை தொடங்கியதில் இருந்து வீழ்ச்சி காணப்பட்டது. மும்பைப் பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் சுமார் 2,400 புள்ளிகள் சரிந்தது. அதேபோல், தேசியப் பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 500 புள்ளிகளுக்கு மேல் இறங்கியது. மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகளின் நிலையும் இதேபோல் சரிவை சந்தித்தன.

சமீப காலத்தில் இந்திய பங்குச் சந்தை சந்தித்த மிகப் பெரிய வீழ்ச்சி இது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக, அமெரிக்காவின் வேலையின்மை விகிதம். வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடந்துகொண்டிருக்கும்போது அமெரிக்கா நாட்டின் வேலைவாய்ப்பு குறித்த தரவுகள் வெளியானது. இந்த தரவுகளில், அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் 4.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது தெரியவந்தது. இது 3 ஆண்டுகளில் இல்லாத உச்சம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த தரவுகள் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுமோ என்ற அச்சத்தை முதலீட்டாளர்கள் மத்தியில் உருவாக்க, அதன் எதிரொலி அமெரிக்க பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் அமெரிக்க பங்குச்சந்தை சரிவை சந்திக்க, நாள் இறுதியில் 2.6 சதவிகிதம் வீழ்ச்சியுடன் முடிவடைந்தது. இதன்பின் இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் இந்திய பங்குச் சந்தைகளில் அதன் தாக்கம் எதிரொலிக்கவில்லை.

இந்த நிலையில், இன்றைய நாளின் தொடக்கமே சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியுடன் தொடங்கின. ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் தொடங்கின. இதில் ஜப்பானின் விவகாரத்தை பொறுத்தவரை ஜப்பான் மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதை தொடர்ந்து அந்நாட்டின் நாணயமான யென் மதிப்பு அதிகரித்து வருகிறது. இவற்றின் தாக்கம் காரணமாக அங்கு பங்குச்சந்தை சரிவில் உள்ளது.

இதற்கிடையே, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்த இஸ்ரேலை பழிவாங்க எப்போதும் வேண்டுமென்றாலும் தாக்குவோம் என ஈரான் அறிவித்திருப்பது மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை அதிகரித்து வருகிறது. இந்த காரணங்களும் இன்றைய பங்குச் சந்தை சரிவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

இதுதவிர, இந்தியாவில் ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகள் திருப்தி அளிப்பதாக இல்லை என்பதால் இந்தியப் பங்குகளை சில முதலீட்டாளர்கள் விற்கத் தொடங்கி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இதுவும் இந்திய பங்குச் சந்தையின் இன்றைய வீழ்ச்சிக்கு காரணமாக சொல்லப்படுகிறது. பங்குச் சந்தை வீழ்ச்சியால் டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் பாதிப்பை எதிர்கொண்டன. திங்கள்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 2,222 புள்ளிகளும், நிஃப்டி 662 புள்ளிகளும் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x