Published : 05 Aug 2024 10:24 AM
Last Updated : 05 Aug 2024 10:24 AM
புதுடெல்லி: அதானி குழும தலைவர் கவுதம் அதானி தனது 70-வது வயதில் தலைமைப் பொறுப்பை துறந்து தொழில் நிர்வாகத்தை வாரிசுகளிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவருக்குத் தற்போது 62 வயதாகிறது.
அதானி குழுமமானது உள்கட்டமைப்பு, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, சிமெண்ட், சூரிய ஆற்றல் உள்ளிட்ட 10 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுடன் மொத்தம் $213 பில்லியன் சந்தை மூலதனத்தை கொண்டுள்ளது.
இந்நிலையில் 62 வயதான கவுதம் அதானி ப்ளூம்பெர்க் நியூஸுக்கு அளித்தப் பேட்டியில் இந்த அதிகார மாற்றம் பற்றி பேசியுள்ளர். அதானிக்கு 2 மகன்கள் உள்ளனர். 2 மகன்கள், மருமகன்களையே அவர் வாரிசாகக் கூறிவருகிறார். இந்நிலையில், “தொழில் வளர்ச்சி நீடித்து நிலைத்து நிற்க அதன் மீதான அதிகாரத்தை வாரிசுகளிடம் ஒப்படைப்பது மிகமிக முக்கியம்” என்று அதானி ஊடகப் பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும், இந்தத் தலைமைப் பொறுப்பு மாற்றம் இயல்பாக, படிப்படியாக, முறைப்படி நடக்க வேண்டும் என்பதால் அந்தப் பொறுப்பை 2-வது தலைமுறையினரிடமே நம்பிக்கையுடன் விட்டுள்ளதாகவும் கவுதம் அதானி கூறியுள்ளார்.
தான் 70வது வயதில் ஓய்வு பெறும் பட்சத்தில் மகன்கள் கரண, ஜீத் மற்றும் அவரது மருமகன்கள் பிரணவ், சாகர் இணைந்தே தொழிலை நடத்தலாம். இல்லாவிட்டால் விருப்பத்திற்கு ஏற்ப பிரிவினை செய்து கொள்ளலாம் என்ற உரிமையை அளித்திருந்தாலும் மகன்களும், மருமகன்களும் இணைந்தே அதானி குழுமத்தை நடத்த விரும்புவதாகத் தெரிவித்துள்ளதாக அதானி கூறியுள்ளார்.
“எனது 4 வாரிசுகளும் அதானி குழும வளர்ச்சி குறித்த வேட்கையுடன் உள்ளனர். பொதுவாக இராண்டாம் தலைமுறையினர் தொழில் வளர்சியில் இத்தகைய ஆர்வத்தைக் காட்டுவது சாதாரணமானது இல்லை. எனது வாரிசுகள் ஒன்றிணைந்து அதானி பாரம்பரியத்தை மேலும் வலுவாகக் கட்டமைக்கத் தயாராக உள்ளனர்” என்று ப்ளூம்பெர்க் பேட்டியில் அதானி கூறியுள்ளது இந்திய தொழில்துறையில் கவனம் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT