Published : 05 Aug 2024 05:34 AM
Last Updated : 05 Aug 2024 05:34 AM
புதுடெல்லி: அசாமில் உள்ள மோரிகானில் செமி கண்டக்டர் ஆலை கட்டுமானப்பணிகளை டாடா குழுமம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது
அசாமில் டாடாவின் செமிகண்டக்டர் ஆலை ரூ.27 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இது, மிகப்பெரிய செமிகண்டக்டர் உற்பத்தி ஆலையாக இருக்கும். டாடாவின் ஆலையில் இருந்து நாளொன்றுக்கு 4 கோடியே 83 லட்சம் செமிகண்டக்டர் சிப்கள் தயாரிக்கப்படும். இந்த ஆலையில், தயாரிக்கப்படும் சிப்கள் மின் வாகனங்கள், தகவல் தொடர்பு மற்றும் நெட்வொர்க் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் பயன்படுத்தப்படக் கூடியதாக இருக்கும். இந்த ஆலையின் மூலம், 15 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 13 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
அசாமின் மோரிகானில் டாடா ஆலை அமைப்பதற்கான முன் மொழிவு திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு நடப்பாண்டு பிப்ரவரி 29-ம் தேதிதான் ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில், திட்டம் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து மாதங்களில் செமிகண்டக்டர் ஆலையின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஆலையில் பயன்படுத்தப்படும் 3 முக்கிய தொழில்நுட்பங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்ட என்பது தனிச்சிறப்பு.
நெட்வொர்க் உள்கட்டமைப்பு, தகவல் தொடர்பு, 5ஜி, ரவுட்டர்கள் போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் டாடாவின் ஆலையிலிருந்து உற்பத்தியாகும் சிப்களை பயன்படுத்தும். மோரிகான் டாடா ஆலை வரும் 2025-க்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அசாம் என்ஐடி சில்சார், என்ஐடி மிசோரம், என்ஐடி மணிப்பூர், என்ஐடி நாகாலாந்து, என்ஐடி திரிபுரா, என்ஐடி அகர்தலா, என்ஐடிசிக்கிம், என்ஐடி அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயாவில் உள்ள இரண்டு நிறுவனங்கள் நார்த் ஈஸ்டர்ன் ஹில் யுனிவர்சிட்டி மற்றும் என்ஐடி ஆகியவை செமிகண்டக்டர் தொழிலுக்கான திறன்சார் பணியாளர்களை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT