Last Updated : 03 Aug, 2024 08:22 PM

31  

Published : 03 Aug 2024 08:22 PM
Last Updated : 03 Aug 2024 08:22 PM

பிஎஸ்என்எல் பக்கம் மாறும் மக்கள் - சேவையைத் தடையின்றி கொடுக்க முடியுமா? | HTT Explainer

உலக அளவில் இரண்டாவது அதிக தொலைத்தொடர்பு பயனாளர்களைக் கொண்ட நாடு இந்தியா. ஆனால், இந்தியாவில் தொலைத்தொடர்பு என்பது பெரும்பாலும் தனியார் நிறுவங்களைச் சார்ந்தே இருக்கிறது. சற்றே வசதி படைத்தவர்கள் மட்டுமே செல்போன் பயன்படுத்த முடியும் என்னும் நிலையை மாற்றும் நோக்கத்தில்தான் அரசு பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) உருவாக்கப்பட்டது. ஆனால், 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்தப் பின் தனியார் தொலைத்தொடர்பு நிறுவங்களின் ஊக்குவிப்பு இந்தியாவில் அதிகரித்தது.

ஜியோ அறிமுகம்: இந்தியாவில் முக்கியமான பணக்காரராக அறியப்படும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி ’ஜியோ’ என்னும் புதிய நெட்வொர்க்கை கடந்த 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்தார். அதன்பிறகுதான் தனியார் நெர்வொர்க்கின் வளர்ச்சி இந்திய மார்க்கெட்டில் பெரும் உச்சம் தொட்டது. அதற்கு முன்பு ஏர்செல், ஏர்டெல், வொடஃபோன், ஐடியா போன்ற நெட்வொர்க்குகள் இருந்தாலும் கூட ஜியோ கொண்டுவந்த பிளான்கள் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, குறைந்த கட்டணத்துக்கு அதிக ஜிபி-களை முதலில் அறிமுகம் செய்து பல கோடி வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்த்தது ஜியோ.

மக்கள் அன்றாடப் பயன்பாட்டுக்கு அதிகமாக நெட்வொர்க்குப் பழகிப்போன நேரத்தில் விலை உயர்வுகளை அறிவித்தது ஜியோ. இதனால், வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதற்குப் போட்டியாக இருக்கக் கூடிய ஏர்டெல் போன்ற பிற சேவைகளும் விலையை அதிகப்படுத்தியது. அதனால், மக்களால் வேறு நெட்வொர்க்குக்கு மாற முடியாத சூழல் உருவானது.

தற்போது மீண்டும் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் - ஐடியா ஆகிய தனியார் நிறுவனங்கள் விலையை அதிகரித்துள்ளது. ஆனால், இந்த உயர்வு மக்களுக்குத் தனியார் நிறுவனத்தின் மீது பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால், பல வாடிக்கையாளர்களும் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்-க்கு மாற ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜியோ தங்கள் சந்தாவை அதிகப்படுத்திய முதல் 20 நாட்களில் 2.5 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல் நெர்வொர்க்-குக்கு மாறியிருக்கின்றனர். இது பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு பாசிட்டிவ்வாக அமைந்துள்ளது.

சேவை தடையின்றி கொடுக்க முடியுமா? - ஆனால், பலரும் பி.எஸ்.என்.எல்-க்கு மாறி வரும் இந்தச் சூழலில் அரசு தொலைதொடர்பு நிறுவனத்தால் தனியார் நெட்வொர்க் தரும் அதே வேகத்தில் சேவையைத் தர முடியுமா என்னும் கேள்வி எழுந்துள்ளது. ஏற்கெனவே, இந்தியா முழுவதிலும் 80,000 டவர் பி.எஸ்.என்.எல்-க்கு இருக்கிறது. இதில் 49,000 டவர்கள் 4ஜி சேவைக்கு ஏற்றபடி மாற்றி அமைக்கும் வசதி கொண்டவை. மேலும், 4ஜி சேவைக்காக தமிழ்நாட்டில் 1500 டவர்கள் புதிதாக போடப்பட்டுள்ளன.

ஆனால், இந்தியாவில் தயாரித்த பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்னும் ’மேக்கின் இந்தியா’ (Make in India) திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்தியாவில் தொலைத் தொடர்புகள் சார்ந்து எந்தப் பொருட்களும் பெரிதாக தயாரிக்கப்படுவதில்லை. இதனால், தொலைத்தொடர்பு சேவைக்கான பொருட்களைப் பிற நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதில் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்-க்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால், 2020-ம் ஆண்டு டாடாவுடன் (TATA) ஒரு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு தேவையான தொலைத்தொடர்பு உபகரணங்களை டாடா நிறுவனம் தயாரித்து தர வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம்.

தமிழகத்தில் சாதாரணமாக வாட்ஸ் அப் பார்ப்பது, பில் கட்டுவது, பணப்பரிவர்த்தனை போன்ற வேலைகளுக்குத் தான் மக்கள் இணைய சேவையைப் பெருவாரியாகப் பயன்படுத்துகின்றனர். அதனால், அவர்களுக்கும் அதிகமான நெட்வொர்க் தேவையில்லை என்பதால் 3ஜி போதுமானது. அதனால், சேவையைத் தடையின்றி வழங்கலாம் என்பது பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கருத்தாகவுள்ளது. மேலும், தமிழகத்தில், சில பெருநகரங்களில் 4ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பகுதிக்கு மட்டும்தான் 4ஜி பயன்படும். அந்தக் குறிப்பிட்ட பகுதியைக் கடந்தால் பி.எஸ்.என்.எல்-லில் 3ஜி தான் கிடைக்கும். 5ஜி நெட்வொர்க் அறிமுகம் செய்ய பல வழிமுறைகள் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருதாகவும் தகவல் சொல்லப்படுகிறது.

மத்திய அரசு தயக்கம்: இது குறித்து நம்மிடம் பேசிய பி.எஸ்.என்.எல் எம்ப்ளாபீஸ் யூனியனின் மாநிலத் தலைவர் பாபு ராதாகிருஷ்ணன், “தனியார் நிறுவன டவர்களில் பி.எஸ்.என்.எல் சேவையை நிறுவ கோரிக்கை வைத்தோம். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் வொடஃபோன் - ஐடியா நிறுவனத்தின் பெரிய முதலீட்டாளரே இந்திய அரசுதான். அவர்களுக்கு அனைத்து இடங்களிலும் டவர்கள் இருக்கிறது. அதைப் பி.எஸ்.என்.எல் சேவைக்குப் பயன்படுத்த இந்திய அரசு ஒப்பந்தம் போடலாம். ஆனால் மத்திய அரசு அதற்கு தயக்கம் காட்டுகிறது. அரசு நினைத்தால் பொதுத்துறை சேவையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கலாம்” எனக் கூறினார்.

”பிஎஸ்என்எல் பக்கம் வாடிக்கையாளர்கள் செல்வதால் ஜியோ, ஏர்டெல் என இரு நிறுவனங்கள் புதிய ஆஃபர்களை அறிவித்து வருகின்றனர். குறிப்பாக. இரு நிறுவனங்களும் ஒரு நாளுக்கு 2 ஜிபி பெறும் பிளான் போட்டால் மட்டுமே 5ஜி கிடைக்கும் என்னும் புதிய நடைமுறையைக் கொண்டுவந்துள்ளது. 2 ஜிபி பிளான்களுக்கு ஜியோ சினிமா, ஜியோ டிவி என ஆஃபர்களும், சப்ஸ்கிரிப்ஷன்களும் கிடைக்கும் என அறிவித்துள்ளது.

உலக அளவில் 2,600 மில்லியன் டாலராக இருக்கும் தொலைத்தொடர்புத் துறைகளின் வர்த்தகம் இன்னும் சில ஆண்டுகளில் 3800 மில்லியன் டாலராக அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவே கணிக்கப்படுகிறது. ஆகையால், அரசு பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் வளர்ச்சிக்கு ஏதேனும் திட்டங்களை அறிமுகம் செய்தால் மட்டுமே இந்தப் புதிய வளர்ச்சியைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இல்லையெனில் தனியார் தொலைதொடர்புகளின் கைதான் இந்தியாவில் ஓங்கும். ஆகவே, 5ஜி சேவை அரசின் நிறுவனமான பி.எஸ்.என்.எல்-க்கு வழங்கி, அழிவின் விளிம்பு நிலையில் இருக்கும் பொதுத் துறை நிறுவனத்தை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x