Published : 26 Jul 2024 07:19 PM
Last Updated : 26 Jul 2024 07:19 PM
தென்காசி: தென்காசி மாவட்டம் மேலகரத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் சிப்ஸ் தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளது. கூட்டுறவு கடன் சங்கத்தின் சிப்ஸ் தயாரிப்பு பணியை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் 3 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.24 லட்சம் மதிப்பிலான கடனுதவி, 6 உறுப்பினர்களுக்கு ரூ.4.8 லட்சம் மதிப்பிலான பயிர்க்கடன், 7 உறுப்பினர்களுக்கு ரூ.3.68 லட்சம் மதிப்பிலான கால்நடை பராமரிப்பு கடன்கள் என மொத்தம் 52 உறுப்பினர்களுக்கு ரூ.48 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசும்போது, "தென்காசி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் விவசாயிகள் பயன்பெரும் வகையில் பயிர்க்கடன், கால்நடை பராமரிப்புக் கடன், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான பொருளாதார மேம்பாட்டுக் கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன், மகளிர் சுய உதவிக் குழு கடன், நகைக் கடன் போன்றவை வழங்கப்படுகின்றன.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆலங்குளம், சங்கரன்கோவில் மற்றும் தென்காசி ஆகிய இடங்களில் நடத்தப்படும் கூட்டுறவு மருந்தகங்களில் 20 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் மின்னணு சேவைகளை வழங்கும் 80 பொது சேவை மையங்கள் மாவட்டம் முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படுகின்றன.
தென்காசி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மூலம் பள்ளிகளில் தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகள், திருக்கோயில் அன்னதான திட்டம் மற்றும் தென்காசி மாவட்ட அம்மா உணவகங்களுக்கு மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்குவதற்காக டிராக்டர்கள், ரோட்டவேட்டர்கள், இயந்திர கலப்பைகள், டிரெய்லர்கள், மருந்து தெளிப்பான்கள், தேங்காய் உரிக்கும் கருவிகள் உட்பட 182 கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இவற்றை விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை நேரில் தொடர்பு கொண்டும். கோஆப்இ வாடகை, உழவன் செயலியின் மூலம் முன்பதிவு செய்தும் வாடகைக்கு பெற்று பயன் பெறலாம்" என ஆட்சியர் கமல் கிஷோர் கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பழனி நாடார், ஈ.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கு.நரசிம்மன், தென்காசி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பா.பூர்விகா, மேலகரம் பேரூராட்சி தலைவர் வேணி, துணைத் தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT