Published : 24 Jul 2024 04:59 PM
Last Updated : 24 Jul 2024 04:59 PM
கோவை: மத்திய பட்ஜெட்டில் வெளியாகியுள்ள அறிவிப்புகளால் பொருளாதாரத்தில் பணசுழற்சி ஏற்பட்டு செலவழிக்கக் கூடிய வருமானம் கிடைக்கும் என ஆடிட்டர்கள், தொழில் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடிசியா) தலைவர் கார்த்திகேயன் கூறியது: “உற்பத்தி பிரிவின் கீழ் செயல்படும் ‘எம்எஸ்எம்இ’ தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ரூ.100 கோடி வரை கிரெடிட் கியாரன்டி திட்டம், ‘என்பிஏ’ ஆகாமல் தடுக்க உதவி, முத்ரா திட்டத்தின் கீழ் கடனுதவி பெறும் உச்சவரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிப்பு, 100 நகரங்களில் ‘பிளக் அண்ட் பிளே’ தொழில் பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. மேலும், காப்பர், 20 வகையான ஸ்கிராப் பொருட்களுக்கு இறக்குமதி வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மிகவும் வரவேற்கத்தக்கது. ‘எம்எஸ்எம்இ’ துறை முன்னுரிமை துறையாக நடத்தப்பட வேண்டும்” என்றார்.
கோவை கம்ப்ரசர் தொழில்நிறுவனங்கள் சங்கம் (கோசியா) தலைவர் ரவீந்திரன் பேசுகையில், “வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் மூன்று விதமான திட்டங்கள் மற்றும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை மிகவும் வரவேற்கத்தக்கது. இருப்பினும் பட்ஜெட் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 9 முன்னுரிமை அம்சங்களுடன் 10-வதாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டிய அம்சமும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை. ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள சிக்கல்களை நீக்க அறிவிப்புகள் இல்லை. தொழில்நுட்ப, தொழில்துறை முன்னேற்றம், உள்கட்டமைப்பு வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு இந்த பட்ஜெட் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
தமிழ்நாடு, புதுச்சேரி பட்டய கணக்காளர் நிறுவனத்தின் செயலாளர் ஜலபதி நம்மிடம், “எம்எஸ்எம்இ வளர்ச்சிக்கு பல அறிவிப்புகள் உள்ளன. ‘சிட்பி’ வங்கிக் கிளைகள் அதிகம் தொடங்கப்படும், பணிக்குச் செல்லும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள், இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகள் மிகவும் வரவேற்கத்தக்கது.வருமானவரி சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரி குறைப்பு உள்ளிட்டவற்றால் முதலீடுகள் அதிகரிக்கும். இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் தங்கம், செல்போன் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைய தொடங்கியுள்ளது. வேளாண்துறை, தொழில்துறை மட்டுமின்றி பெண்கள், பெண் குழந்தைகள் நலன் உள்ளிட்ட வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது” என்றார்.
‘ஸ்டார்ட் அப் அகாடமி’ தலைவர் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் கூறும்போது, “வளர்ச்சியையும், தொலைநோக்கு பார்வையையும் உள்ளடக்கியுள்ளதாக பட்ஜெட் அமைந்துள்ளது. அனைத்துத் துறைகளுக்கும் ஒதுக்கீடு மற்றும் கவனம் கொடுக்கப்பட்டுள்ளது. வருமானவரி சட்டத்தில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கான வரி 20 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக குறைக்கப்பட்டாலும் குறியீட்டு நன்மை நீட்டிக்கப்பட்டுள்ளது. தனிநபர் புதிய வரி விதிப்பின் மூலம் ஆரம்ப நிலை வரிதாரர்களுக்கு ரூ.17,500 வரை வருமானவரிச் சலுகை கிடைக்கும்.
பொருளாதாரத்தில் பணசுழற்சி ஏற்பட்டு செலவழிக்கக்கூடிய வருமானம் கிடைக்கப்பெறும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஏஞ்சல் வரியை நீக்கியுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. வருமானவரி பிடித்தம் (டிடிஎஸ்) விகிதத்தில் பகுத்தறிந்து பிடித்தம் செய்வதில் இருந்து முறைப்படுத்துதல் மூலம் 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. டிடிஎஸ் பிடித்தம் செய்து அரசுக்கு செலுத்த காலதாமதம் ஏற்பட்டால் சிறை தண்டனை வரை இருந்ததை குற்றவியல் வழக்கில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது” என்றார்.
‘கிரெடாய்’ அமைப்பின் துணை தலைவர் அபிஷேக் கூறும்போது, “நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கான வரி 20 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக குறைக்கப்பட்டாலும் குறியீட்டு நன்மை நீட்டிக்கப்பட்டுள்ளது. தனிநபர் புதிய வரி விதிப்பின் மூலம் ஆரம்ப நிலை வரிதாரர்களுக்கு ரூ.17,500 வரை வருமான வரி சலுகை கிடைக்கும். பெண்களுக்கு பதிவுத்துறை கட்டணம் குறைப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது. வீட்டுக் கடன் திட்டங்களுக்கு மானியம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்ற அறிவிப்பு, நகர்புற ஏழைகளுக்கு வீடுகள், தொழிலாளர்களுக்கு தனியார் பங்களிப்புடன் ‘பிபிபி’ திட்டத்தில் வீடுகள் கட்ட அனுமதி உள்ளிட்ட பல அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது” என்றார்.
‘லகு உத்யோக் பாரதி’ மாநில தலைவர் சிவக்குமார் கூறும் போது, “வேலைவாய்ப்பு சார்ந்த ஊக்குவிப்புத் திட்டங்கள், ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி, உணவு தர மற்றும் பாதுகாப்பு ஆய்வகங்கள் அமைக்க நிதியுதவி, 100 நகரங்களில் ‘பிளக் அண்ட் பிளே’ திட்டம், புதிய தொழில் பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்டவற்றுடன், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, வங்கி என அனைத்து துறை வளர்ச்சிக்கும் உதவும் வகையில் பட்ஜெட் அறிவிப்புகள் அமைந்துள்ளன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT