Published : 23 Jul 2024 04:19 PM
Last Updated : 23 Jul 2024 04:19 PM
புதுடெல்லி: 2023-24-ம் நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான வளர்ச்சி 8.2 சதவீதமாகவும், மதிப்பீட்டு வளர்ச்சி 9.6 சதவீதமாகவும் இருந்ததாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் 2024-ஐ மக்களவையில் இன்று தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், "நிச்சயமற்ற உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் மீள்திறனை வெளிப்படுத்தும் வகையில் பொருளாதார முன்னேற்றம் அமைந்துள்ளது. 2023-24-ம் நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான வளர்ச்சி 8.2 சதவீதமாகவும், மதிப்பீட்டு வளர்ச்சி 9.6 சதவீதமாகவும் இருந்தது. தனியார் நுகர்வு செலவினம் 2023-24-ம் நிதியாண்டில் 4.0 சதவீத வளர்ச்சியடைந்தது.
2024-25-ம் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. தென்மேற்கு பருவமழை நன்கு பெய்யும் என்ற கணிப்புகள் காரணமாக வேளாண் துறை உற்பத்தி தொடர்பாக நம்பிக்கை அதிகரித்துள்ளது. வலுவான கார்ப்பரேட், வங்கி இருப்பு நிலைகள், குறிப்புகள், மூலதனச் செலவினங்களில் அரசின் தொடர்ச்சியான கவனம் ஆகியவை வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2022-23-ம் நிதியாண்டில் 6.7 சதவீதமாக இருந்த சராசரி சில்லறை பணவீக்கம் 2023-24-ம் ஆண்டில் 5.4 சதவீதமாக குறைந்துள்ளது. 2024-25-ம் ஆண்டில், கடன் தவிர மொத்த வரவுகளும், மொத்த செலவுகளும் முறையே ரூ.32.07 லட்சம் கோடி எனவும் ரூ.48.21 லட்சம் கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. நிகர வரி வருவாய் ரூ.25.83 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய மானியங்கள் 2023-24 திருத்திய மதிப்பீட்டில் 1.4 சதவீதத்திலிருந்து 2024-25 பட்ஜெட்டில் 1.2 சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த வரி வருவாய் 13.4 சதவீதமும், மத்திய அரசுக்கான வரி நிகர வருவாய் 10.9 சதவீதமும் அதிகரித்துள்ளது. வரி வசூலில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சியால் கடந்த சில ஆண்டுகளில் வருவாய் வரவுகள் தொடர்ந்து உயரந்துள்ளன. 2023-24-ம் நிதியாண்டில் மத்திய அரசின் மொத்த செலவினம் 5.9 % அதிகரித்துள்ளது" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT