Published : 23 Jul 2024 03:45 AM
Last Updated : 23 Jul 2024 03:45 AM
புதுடெல்லி: சர்வதேச சவால்களையும் மீறி, இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை அவர் இன்று தாக்கல் செய்கிறார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மக்களவை தேர்தலுக்கு பிறகு புதிய அரசு அமைந்திருப்பதால் நடப்பு 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதையொட்டி, பட்ஜெட்டின் முன்னோட்டமாக கடந்த 2023-24 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
இந்திய பொருளாதாரம் சர்வதேச சவால்களையும் மீறி, வலுவான நிலையில் உள்ளது. மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் கரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரம் விரைவாக மீண்டுள்ளது. கடந்த 2023-24 நிதி ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (ஜிடிபி) 8.2% வளர்ச்சி அடைந்துள்ளது.
கடந்த நிதி ஆண்டில் சர்வதேச அளவிலான சராசரி பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதமாக இருந்தது. அதை ஒப்பிடும்போது, இந்திய பொருளாதாரம் மிக சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது.
கடந்த 2 நிதி ஆண்டுகள்போல, நடப்பு 2024-25 நிதி ஆண்டிலும் இந்திய பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டும். இது 6.5 முதல் 7 சதவீத அளவில் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனா பரவல், உக்ரைன் மீதான போர் உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகள் காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் பணவீக்கம் அதிகமாக இருந்தது. இதை கட்டுப்படுத்த, வட்டி விகித உயர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது. இதனால், பணவீக்கம் இப்போது கட்டுக்குள் உள்ளது.
2022-23 நிதி ஆண்டில் 6.7 சதவீதமாக இருந்த பணவீக்கம், 2023-24 நிதி ஆண்டில் 5.4 சதவீதமாக குறைந்தது. இது நடப்பு நிதி ஆண்டில் 4.5 சதவீதமாகவும், அடுத்த நிதி ஆண்டில் 4.1 சதவீதமாகவும் குறையும் என ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது. பருவமழை சரியாக பெய்து, சர்வதேச அளவில் மிகப்பெரிய அரசியல் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றால் இது சாத்தியமாகும்.
அதேநேரம், கடந்த 2022-23 நிதி ஆண்டில் 6.6 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம், 2023-24 நிதி ஆண்டில் 7.5 சதவீதமாக அதிகரித்தது. பருவநிலை சாதகமாக இல்லாததால், வேளாண் உற்பத்தி குறைந்து, சில உணவுப் பொருட்கள் விலை அதிகரித்ததே இதற்கு காரணம்.
கடந்த 2022-23 நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஜிடிபி மதிப்பில் 2 சதவீதமாக இருந்தது. இது 2023-24 நிதி ஆண்டில் 0.7% ஆக குறைந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்களில் மத்திய, மாநில அரசுகளின் பங்கு முறையே 49% மற்றும் 29% ஆக இருந்தது. தனியார் துறையினரின் பங்கு 22% ஆக இருந்தது. இத்தகைய திட்டங்களில் தனியார் முதலீடு மேலும் அதிகரிப்பது அவசியம்.
கடந்த நிதி ஆண்டில் தனியார் துறையில் புதிய வேலைவாய்ப்பு கணிசமாக அதிகரித்தது. பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வேலை உருவாக்கம் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட விவகாரங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே, ‘2047-க்குள் வளர்ந்த இந்தியா’ என்ற இலக்கை அடைய மத்திய அரசு - மாநில அரசுகள் - தனியார் துறை ஆகிய முத்தரப்பு இடையே ஒப்பந்தம் அவசியமாகிறது.
மேலும், இந்திய பொருளாதார வளர்ச்சியில் வேளாண்மை துறையின் பங்கும் அவசியம். எனவேதான், விவசாயிகளுக்கு மின்சாரம், உரம் உள்ளிட்டவை மானிய விலையில் வழங்கப்படுகின்றன. விவசாயிகளின் வருமானத்துக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 23 வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுகிறது. பி.எம். கிசான் திட்டத்தின்கீழ் சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நடப்பு 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். இதன்மூலம் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நபர் என்ற பெருமையை பெறுகிறார். வருமான வரி கட்டமைப்பில் மாற்றம் செய்வது தொடர்பான அறிவிப்பு, தொழில் துறையினரை ஊக்குவிக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT