Published : 21 Jul 2024 05:56 AM
Last Updated : 21 Jul 2024 05:56 AM
புதுடெல்லி: மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் கடந்த 19-ம் தேதி சர்வதேச வர்த்தகம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. பிரிட்டனின் லண்டன் பங்குச் சந்தை செயல்பாடுகள் முடங்கின. அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் பாதிப்புகள் ஏற்பட்டன. எனினும் இந்தியாவின் தேசிய பங்கு சந்தை, மும்பை பங்கு சந்தை எவ்வித பாதிப்பும் இன்றி வழக்கம்போல செயல்பட்டன.
இதுதொடர்பாக இரு பங்கு சந்தைகளும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், “மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் உலகம் முழுவதும் பாதிப்புகள் ஏற்பட்டன. இந்திய பங்கு சந்தைகள் எவ்வித பாதிப்பும் இன்றி செயல்பட்டன. இந்திய பங்குசந்தைகளில் சுமார் 1,400-க்கும் மேற்பட்ட வர்த்தக உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 11 பேருக்கு மட்டுமே சிறிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. அந்த பாதிப்புகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது’’ என்று தெரிவிக்கப்பட்டது.
சர்வதேச பங்கு சந்தைகளை ஒப்பிடும்போது இந்திய பங்கு சந்தைகளில் தகவல் தொழில்நுட்பத்துக்காக மிக குறைவான தொகையே செலவிடப்படுகிறது.
லண்டன் பங்கு சந்தையின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புக்காக ரூ.6,556 கோடி செலவிடப்படுகிறது. இதேபோல அமெரிக்காவின் நாஸ்டாக் பங்கு சந்தைக்காக ரூ.1,949 கோடி, ஹாங்காங் பங்கு சந்தைக்காக ரூ.6,807 கோடி செலவிடப்படுகிறது. ஆனால் இந்திய தேசிய பங்கு சந்தையின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புக்காக ரூ.570 கோடி மட்டுமே செலவிடப்படுகிறது.
இந்திய பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, தனது தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புக்காக ரூ.93 கோடியை மட்டுமே செலவிடுகிறது. ஆஸ்திரேலிய பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்புரூ.205 கோடியையும், சிங்கப்பூர் பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு ரூ.420 கோடியையும் செலவிடுகின்றன.
இதுகுறித்து இந்திய பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்ஜியால் சமூக வலைதளத்தில் வெளியிட்டபதிவில், “தகவல் தொழில்நுட்பங் களுக்காக இந்திய பங்கு சந்தைகள் மிக குறைவாகவே செலவிடுகின்றன. எனினும் மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் இந்திய பங்கு சந்தைகளில் பாதிப்பு ஏற்படவில்லை. சர்வதேச நிதித் துறையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை ஏற்படுத்த முயற்சி செய்வது தவறான அணுகுமுறை ஆகும். தனித்தனி கட்டமைப்புகளின் அடிப்படையில் செயல்படுவதே பாது காப்பானது’’ என்று தெரிவித்து உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT