Last Updated : 09 Jul, 2024 03:46 PM

3  

Published : 09 Jul 2024 03:46 PM
Last Updated : 09 Jul 2024 03:46 PM

இபிஎஃப் நிறுவனம் சார்பில் தமிழில் யூடியூப் சேனல் தொடக்கம் - சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம்

கோவையில் டாக்டர் பாலசுந்தரம் சாலையில் அமைந்துள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மண்டல அலுவலகம்.

கோவை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ) சார்பில், இந்திக்கு அடுத்து முதல்முறையாக தமிழில் யு-டியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்களில் 20 மற்றும் அதற்கு மேல் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டால் அவர்களை பி.எஃப் திட்டத்தின்கீழ் பயனாளர்களாக சேர்த்தல் அவசியமாகும். மாதந்தோறும் தொழிலாளர்கள் ஊதியத்தில் இருந்து 12 சதவீதமும், நிறுவன உரிமையாளர் தரப்பில் இருந்து 12 சதவீத தொகையும் பங்களிப்பு செய்யப்படும்.

கோவையில் டாக்டர் பாலசுந்தரம் சாலையில் அமைந்துள்ள பிஎஃப் மண்டல அலுவலக கட்டுப்பாட்டின்கீழ் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள் உள்ளன. கோவை அலுவலகத்தில் 28,000 தொழில் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனாளர்களாக உள்ளனர். பி.எஃப். தொகை எடுப்பது, பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களில் திருத்தங்கள் மேற்கொள்வது என பல்வேறு காரணங்களுக்காக கோவையில் உள்ள மண்டல அலுவலகத்துக்கு தினசரி ஏராளமானோர் வருகின்றனர்.

ஆன்லைன் முறை நடைமுறைப்படுத்தப்பட்ட போதும் பெரும்பாலும் சர்வர் பிரச்சினை காரணமாக பணிகள் மேற்கொள்ள முடியாததால் அலுவலகத்துக்கு நேரில் வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, கோவை மண்டல அலுவலக அதிகாரிகள் கூறியதாவது: தொழிலாளர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப் படுகின்றன. ஆன்லைனில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டாலும் சில நேரங்களில் தொழில்நுட்ப காரணங்களால் காலதாமதம் ஏற்படுகிறது. இது தவிர்க்க முடியாதது.

முன்பு பெயர், பிறந்த நாள் ஆகியவற்றில் திருத்தம் செய்ய ஆவணங்களை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. இதற்கு ஜாயிண்ட் டிக்லரேஷன்(JD) என்று பெயர். இந்த நடவடிக்கையையும் எளிதாக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 1 முதல் மேற்குறிப்பிட்ட திருத்தங்களை ஆன்லைனில் பதிவு செய்ய அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

கோவையில் உள்ள அலுவலகத் தில் பல்வேறு காரணங்களுக்காக தினமும் குறைந்தபட்சம் 300 முதல் 600 தொழிலாளர்கள் வருகின்றனர். தொழிலாளர்களின் பி.எஃப் தொடர்பான நடவடிக்கைகளில் நிறுவனங்கள் தரப்பில் இருந்தே சில நடவடிக்கைகளை எளிதில் மேற்கொள்ளலாம். தவிர, ஆன்லைன் வசதியை பயன்படுத்த தொழிலாளர்கள் முன்வர வேண்டும்.

பி.எஃப் அலுவலகத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வருவதை பயனாளிகள் தவிர்க்கலாம். மேலும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் இந்திக்கு அடுத்து முதல் முறையாக தமிழில் யு-டியூப் சேனல் ‘SOCIALEPFO TAMIL’ என்ற பெயரில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது வரை 16 வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் தங்களுக்கு ஏற்படும் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் பெறும் வகையில் வீடியோக்கள் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப் பட்டு வருகின்றன. இதன்மூலம் பயனாளர்கள், பிஎஃப் அலுவலகத்துக்கு செல்லாமலே தேவையான விளக்கங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x