Published : 30 Jun 2024 07:52 AM
Last Updated : 30 Jun 2024 07:52 AM
புதுடெல்லி: இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக கடந்த 2021-ம் ஆண்டு கதி சக்தி திட்டத்தை பிரதமர்மோடி தொடங்கினார். இதன்படிரயில்வே, சாலை, துறைமுகங்கள்உள்ளிட்ட 16 அமைச்சகங்கள் ஒன்றிணைக்கப்பட்டு உள்ளன. இந்த திட்டம் ரூ.100 லட்சம் கோடி செலவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
புதிதாக அறிவிக்கப்படும் திட்டங்கள் குறித்த நேரத்தில் நிறைவு பெறாமல் திட்டச் செலவு அதிகரிப்பது நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில் கதி சக்தி திட்டத்தின் கீழ்மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் குறித்த நேரத்தில் திட்டங்கள் நிறைவு பெற்று மக்களின் வரிப் பணம் வீணாவது தடுக்கப்படுகிறது.
கதி சக்தி திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 101 புதிய துறைமுகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 200 புதிய விமான நிலையங்களை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த சூழலில் அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச முதலீட்டு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி, இந்திய பிரதமர் மோடியின் கதி சக்திதிட்டத்தை வெகுவாகப் பாராட்டி உள்ளது. அந்த நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2024-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.3 சதவீதமாக இருந்தது. இது, வரும் 2029-ம் ஆண்டில் 6.5சதவீதமாக அதிகரிக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் கதி சக்தி திட்டத்தால் இந்தியாவின் உள்கட்டமைப்பு திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன.
துறைமுகங்கள்: உலக வங்கியின் சரக்கு குறியீடு ஆய்வறிக்கை 2023-ன்படி, சர்வதேச துறைமுகங்களின் சரக்கு கையாளும் வேகத்தில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. அமெரிக்க துறைமுகங்களுக்கு வரும் சரக்கு கப்பல்களில் இருந்து சராசரியாக 1.5 நாட்களில் சரக்குகள் இறக்கப்படுகின்றன. ஆஸ்திரேலியாவில் 1.7 நாட்கள், சிங்கப்பூரில் ஒரு நாள் என்ற வகையில் சரக்குகள் கையாளப்படுகின்றன. ஆனால் இந்திய துறைமுகங்களில் 0.9 நாளில் கப்பல்களில் இருந்து சரக்குகள் இறக்கப்படுகின்றன.
பொதுவாக இந்திய துறைமுகங்களுக்கு வரும் கப்பல்கள், 3 நாட்களுக்குள் சரக்குகளை இறக்கிவிட்டு புதிய சரக்குகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு செல்கின்றன.ஆனால் அமெரிக்க துறைமுகங்களில் ஒரு சரக்கு கப்பல் சுமார்7 நாட்கள் வரை காத்திருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்க துறைமுகங்களில் சுமார் 4 நாட்கள் வரை சரக்கு கப்பல்கள் காத்திருக்கின்றன. ஜெர்மனி துறைமுகங்களில் ஒரு கப்பல் சுமார் 10 நாட்கள் வரை காத்திருக்கும் நிலை உள்ளது.
இந்ந்தியாவில் கதி சக்தி திட்டத்தில் ரூ.60,900 கோடி செலவில் புதிதாக 101 துறைமுகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதில் 26 துறைமுக திட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. 42 திட்டங்கள் கட்டுமான நிலையிலும், 33 திட்டங்கள் ஆரம்ப நிலையிலும் உள்ளன.
கதி சக்தி திட்டத்தின் கீழ் இந்தியாவின் சாகர் மாலா (நீர்வழித்தடம்) திட்டத்தில் 220 நீர்வழித்தட திட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. 231 திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 351 திட்டங்கள் ஆரம்ப நிலையில் உள்ளன.
இந்தியாவின் உள்கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தால் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் சீனாவை இந்தியா முந்துகிறது. இவ்வாறு மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் உள்கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT