Published : 28 Jun 2024 05:47 PM
Last Updated : 28 Jun 2024 05:47 PM

மூன்றாம் பாலினத்தோரின் ஸ்டார்ட்-அப்களுக்கு ஆதார மானிய நிதி: தமிழக அரசின் அறிவிப்புகள்

சென்னை: தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை உலகளாவிய அளவில் விரிவுபடுத்திட, தமிழக அரசு சார்பில் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் புத்தொழில் ஒருங்கிணைப்பு மையங்கள் தொடங்கப்படும். வரும் நிதியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.4.11 கோடி மதிப்பீட்டில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் என்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அறிவிப்புகளை துறையின் அமைச்சர் தா.மோ. அன்பரசன் வெளியிட்டார். அதன் விவரம்: > ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் கலைஞர் கடனுதவித் திட்டம். குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்கள் கடன் பெறுவதினை ரூ.20 லட்சம் வரை எளிதாக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். தாய்கோ வங்கி அளிக்கும் கடனுக்கு தற்போது ஆண்டுக்கு 10% வட்டி விகிதம் என்ற அளவில் இருந்து 7% வட்டி விகிதத்தில் வழங்கப்படும்.

> வேலையில்லா இளைஞர்களு்ககான வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில், வேலையில்லா இளைஞர்களை தொழில் முனைவோர்களாக ஊக்குவிக்கும் வகையில் ஆண்டு குடும்ப வருமான உச்ச வரம்பு, ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்படும். தொழில் தொடங்கவுளள மாவட்டத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்படும்.

> ரூ.5 கோடி செலவில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க வாங்குபவர், விற்பனையாளர் சந்திப்புகள் 6 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும்.

> 25 விழுக்காடுக்கு மேல் மாற்றுத்திறன் படைத்தவர்களை பணியில் அமர்த்தும் குறு, சிறு மற்றும நடுத்தர நிறுவனங்களுக்கு ஊதியப்பட்டியல் மானியமாக ஒரு மாற்றுத்திறனாளி பணியாளருக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.24 ஆயிரம் வரை, உற்பத்தி தொடங்கி நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

> ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் காஞ்சிபுரம் - குன்றத்தூர் திருமுடிவாக்கத்தில் 2.47 ஏக்கரில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் தமிழ்நாடு சிட்கோ மூலம் அமைக்கப்படும்.

> திண்டுக்கல்- ஒட்டன்சத்திரம், கொத்தயத்தில் 53.50 ஏக்கரில் 2000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் ரூ.16.58 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு சிட்கோ மூலம் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

> தூத்துக்குடி - கயத்தார், சங்கரப்பேரியில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை உருவாக்க 23 ஏக்கரில், 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில், ரூ.6.51 கோடி மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

> சிவகங்கை - மானாமதுரை, மாங்குளத்தில் 10 ஏக்கரில் 300 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் ரூ.2.70 கோடி மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

> தூத்துக்குடி - கோவில்பட்டி, சிட்கோ தொழிற்பேட்டையில் தமிழ்நாடு சிட்கோ மூலம், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், மூலப்பொருட்களை சேமித்து வைக்க ரூ.2.82 கோடி திட்ட மதிப்பீட்டில் 6,600 சதுர அடியில் சேமிப்புக் கிடங்கு கட்டப்படும்.

> விருதுநகர் சிட்கோ தொழிற்பேட்டையில் தமிழ்நாடு சிட்கோ மூலம், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், மூலப்பொருட்களை சேமித்து வைக்க ரூ.1.83 கோடி திட்ட மதிப்பீட்டில் 4,250 சதுர அடியில் சேமிப்புக் கிடங்கு கட்டப்படும்.

> தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை உலகளாவிய அளவில் விரிவுபடுத்திட, தமிழக அரசு சார்பில் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் புத்தொழில் ஒருங்கிணைப்பு மையங்கள் தொடங்கப்படும்.

> புத்தொழில் சூழமைவு மேம்பாட்டை மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவலாக்கும் வகையில் இந்தாண்டில், கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் வட்டார புத்தொழில் மையங்கள் உருவாக்கப்படும்.

> தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் StartupTN சென்னை மெட்ரோ மையத்தில் நவீன தொழில்நுட்பத்தினை மையமாகக் கொண்ட “தொழில் நயம்” எனும் நவீன வடிவமைப்பு உதவி மையம் நிறுவப்படும்.

> மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளால் தொடங்கி நடத்தப்பட்டு வரும் புத்தொழில் நிறுவனங்களுக்கு, சிறப்பு ஆதார மானிய நிதி வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.

> வரும் நிதியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவு ஊக்குவிக்கும் வகையில் ரூ.4.11 கோடி மதிப்பீட்டில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம், பள்ளிக் கல்வித் துறையுடன் ஒருங்கிணைந்து விரிவுபடுத்தி செயல்படுத்தப்படும்.

> இறுதியாண்டு கல்லூரி மாணவர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கு, இத்துறை மூலம் செயல்படுத்தப்படும் தொழில் முனைவுத் திட்டங்கள் குறித்த திட்ட விளக்க கூட்டங்கள் ரூ.1 கோடி செலவில் நடத்தப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x