Published : 24 Jun 2024 06:42 PM
Last Updated : 24 Jun 2024 06:42 PM
புதுடெல்லி: சர்க்கரை மற்றும் உயிரி எரிபொருள் துறையின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் சர்வதேச மாநாடு டெல்லியில் நாளை (ஜூன் 25) கூடுகிறது.
இது தொடர்பாக உணவு மற்றும் பொது விநியோகத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "2024 ஜூன் 25 முதல் 27 வரை சர்க்கரைத் துறையில் 'ஐஎஸ்ஓ கவுன்சில் கூட்டம்' என்ற உலகளாவிய நிகழ்வை, இந்தியா டெல்லியில் நடத்துகிறது. 30-க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பல சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், இந்தக் கூட்டத்தில் பங்கேற்று சர்க்கரை மற்றும் உயிரி எரிபொருள் துறையின் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
இந்தியா, உலகின் மிகப்பெரிய நுகர்வோராகவும், இரண்டாவது பெரிய சர்க்கரை உற்பத்தியாளராகவும் உள்ளதால், ஐஎஸ்ஓ கவுன்சில், 2024ம் ஆண்டிற்கான இந்த அமைப்பின் தலைவராக இந்தியாவைப் பரிந்துரைத்தது. கூட்டத்தின் ஒரு பகுதியாக, உயிரி எரிபொருள் மற்றும் பிற துணை தயாரிப்புகளின் உற்பத்தியில், இந்தியா சமீபத்திய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதை வெளிப்படுத்தும் வகையில், 2024, ஜூன் 24 அன்று உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகரில், தானியம் சார்ந்த ஒரு வடிப்பாலைக்கு சர்வதேசப் பிரதிநிதிகளின் தொழில்துறை சுற்றுப்பயணத்துடன் நிகழ்வு தொடங்குகிறது.
25.06.2024 அன்று பாரத மண்டபத்தில் 'சர்க்கரை மற்றும் உயிரி எரிபொருள்கள் - உருவாகி வரும் கண்ணோட்டங்கள்' என்ற தலைப்பில், பயிலரங்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரலாத் ஜோஷி பயிலரங்கைத் தொடங்கி வைப்பார்.
உலகின் பல்வேறு அமைப்புகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளுக்கு உலகளாவிய சர்க்கரைத் துறை, உயிரி எரிபொருள், நிலைத்தன்மை மற்றும் விவசாயிகளின் பங்கு போன்றவற்றில் உலகின் எதிர்கால நிலை குறித்து விவாதிக்க இந்தப் பயிலரங்கு வாய்ப்பை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024, ஜூன் 26, 27 ஆகிய தேதிகளில், ஐ.எஸ்.ஓ.வின் பல்வேறு குழுக் கூட்டங்கள் நடைபெறும். அமைப்பின் தலைவர் என்ற முறையில் உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா, இந்தக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவார். இவை முக்கியமாக, நிறுவனத்தின் பல்வேறு நிர்வாக மற்றும் செயல்பாட்டு அம்சங்களில் கவனம் செலுத்தும். ஐ.எஸ்.ஓ.வின் பொருளாதார வல்லுநர்கள் நடத்திய சில ஆய்வுகளின் விளக்கக்காட்சியும் இதில் இடம்பெறும். 27.06.2024 அன்று மாலை டெல்லி செங்கோட்டைக்கான பயணத்துடனும், 28.06.2024 அன்று டெல்லியில் உள்ள பிரதமர்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்திற்கு செல்வதுடனும் நிகழ்ச்சிகள் நிறைவடையும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT