Published : 18 Jun 2024 05:34 PM
Last Updated : 18 Jun 2024 05:34 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.12,700 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக நிதிக்குழு கூட்டத்துக்குப் பிறகு துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ரேஷன் கடை திறப்பு பற்றி விவாதித்தோம் என்றும், பெண்கள் கருத்து அறிந்து முடிவு எடுக்கவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்களவைத் தேர்தல் வந்ததால் புதுச்சேரி மாநிலத்தில் நடப்பு நிதியாண்டு 2024-25-க்கு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முடியவில்லை. அரசின் 5 மாத செலவினங்களுக்கு மீண்டும் இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி கடந்த பிப்ரவரி 22-ம் தேதி ரூ.4,634 கோடிக்கு தாக்கல் செய்தார். இதையடுத்து முழுமையான பட்ஜெட் ஜூலையில் புதுவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதையொட்டி இன்று தலைமை செயலகத்தில் துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் திட்டக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமசிவாயம், லட்சுமிநாராயணன், தேனீஜெயக்குமார், திருமுருகன், சாய்சரவணக்குமார், எதிர்கட்சித்தலைவர் சிவா, தலைமைச் செயலாளர் சரத்சவுகான், அரசு செயலர்கள், இயக்குநர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்துக்கு பிறகு துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது: ''எழுச்சிமிகு புதுச்சேரி என்பதுதான் இக்கூட்டத்தின் முதல் நோக்கம். புதுச்சேரி முன்னேற கருத்துகளை தெரிவித்தனர். மக்கள் தேவைகளை தெரிவித்தனர். அனைத்து வித சரியான யோசனைகளையும் ஏற்று அமல்படுத்த முடிவு எடுத்துள்ளோம். எழுச்சிமிகு புதுச்சேரி வெறும் கோஷமாக இல்லாமல், நடைமுறையிலும் வெற்றிக்கரமாக மாறும்.
ரூ.12,700 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிட்ட்டுள்ளோம். இதை எப்படி உயர்த்தலாம் என்று கருத்துகள் வந்துள்ளது. அனைத்து கருத்துகளையும் உள்வாங்கியுள்ளோம். ஒரு புதிய எழுச்சியை முன்னேற்றத்தில் புதுச்சேரி காணப்போகிறது. ரேஷன் கடை திறப்பு பற்றி கூட்டத்தில் விவாதித்தோம். பெண்களின் கருத்தறிந்து அதற்கேற்ப அத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்.
அரிசி வாங்கி பயன்படுத்தும் மக்களின் கருத்தே முக்கியம். நீட் தேர்வு விவகாரத்தில் எனது கருத்தை விட நீட் தேர்வு வேண்டாம் என்போர் உச்ச நீதிமன்றம் தான் செல்லவேண்டும். திட்டங்களை செயல்படுத்தும் போது இதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த முன்னுரிமை தரப்படும். கடன் தள்ளுபடிக்கான எல்லா முயற்சியும் எடுக்கப்படும்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT