Published : 18 Jun 2024 02:58 PM
Last Updated : 18 Jun 2024 02:58 PM

கோவையில் அமைகிறது தமிழ்நாடு ‘ஸ்டார்ட் அப் செல்’ - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதி

கோவையில் பல்வேறு தொழில் அமைப்பு நிர்வாகிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தொழில் துறையினரின் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் டிஆர்பி.ராஜா.

கோவை: தமிழ்நாடு ‘ஸ்டார்ட் அப் செல்’ கோவையில் அமைக்கப்படும் என அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்தார்.

இந்திய தொழில்கள் கூட்டமைப்பு, இந்திய தொழில் வர்த்தக சபை, கொங்கு குளோபல் போரம், தென்னிந்திய மில்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகள் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா தலைமை வகித்தார்.

நிகழ்வில், இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) தென்னிந்திய பிரிவின் தலைவர் நந்தினி பேசும்போது, ‘‘தொழில், கல்வி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது. தொழில் வளர்ச்சி, சுற்றுச்சூழல் மேம்பாடு பணிகளுக்கென ஒரு கூட்டு ஆலோசனை மன்றத்தை நிறுவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இந்திய தொழில்கள் கூட்டமைப்பு, கோவை கிளை தலைவர் அர்ஜூன் பிரகாஷ் கூறும்போது, ‘‘ஆசிய நாடுகளில் மிகச் சிறப்பான நிலையான வளர்ச்சியை கோவை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ‘கோவை நெக்ஸ்ட்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். அனைத்து துறை நிறுவனங்களும் ஒன்றுபட்டு செயல்பட்டால் தொழில்துறையில் முதலீடுகள் அதிகரிக்கும். ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களும் வளர்ச்சி பெற உதவும்’’ என்றார்.

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத் தலைவர் திருஞானம் பேசும்போது, ‘கோவையில் ரூ.9 கோடி மதிப்பில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கிளஸ்டர் அமைக்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது.‘எம்எஸ்எம்இ’ துறைக்கென பிரத்யேக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா பேசும்போது, ‘‘கோவை வளர்ச்சியில் அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது. ‘கோவை நெக்ஸ்ட்’ என்ற திட்டம் கோவை மட்டுமின்றி, தமிழக ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் உதவும் வகையில் சிறந்த முறையில் செயல் படுத்தப் படுகிறது. கோவையில் விரைவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும். தமிழ்நாடு ‘ஸ்டார் அப் செல்’ கோவையில் அமைக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x