Published : 13 Jun 2024 04:14 PM
Last Updated : 13 Jun 2024 04:14 PM

ஜூன் 22-ல் கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில்: ஆண்டின் முதல் கூட்டம் இது!

புதுடெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் ஜூன் 22-ம் தேதி நடைபெறும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2017ம் ஆண்டு ஜூலையில் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் ஒவ்வொரு காலாண்டிலும் கூடுவது வழக்கமாக இருந்தது. எனினும், 2022 முதல் அது 6 முறை மட்டுமே கூடியுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் கடைசி கூட்டம் நடந்து முடிந்து எட்டரை மாதங்கள் ஆகியுள்ள நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 53வது கூட்டம் 2024 ஜூன் 22ம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் என்று நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் இன்னும் தெரியவில்லை. எனினும், மறைமுக வரி விதிப்புக்கான பரிந்துரைகளை மாநில நிதி அமைச்சர்கள் வலியுறுத்துவார்கள் என்றும், அவை அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட்டில் இணைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு விகிதங்களில் உள்ள வரி கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டும் என்பதில் தொழில்துறை ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜிஎஸ்டி வருவாய் தற்போது கணிசமாக உயர்ந்துள்ளதால் வரி விகிதங்களில் சீரமைப்பை அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தொழில்துறையினர் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகிக்கிறார். அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் அதில் உறுப்பினர்களாக உள்ளனர். 2023ம் ஆண்டின் இறுதியில், இதன் ஒருங்கிணைப்பாளராக உத்திரப் பிரதேச நிதியமைச்சர் சுரேஷ் குமார் கன்னா நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக வரும் 22-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட உள்ளதால் பல்வேறு பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x